பூஜையின் போது உயிர் துறந்த அர்ச்சகர்: சிவன் கோவிலில் அதிர்ச்சி
ஆந்திராவில் சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் ஒருவர், சிவனுக்கு பூஜை செய்துக் கொண்டிருந்தபோதே, சிவலிங்கத்தின் மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தில் உள்ள சோமேஸ்வரர் ஜனார்த்தனன் கோவிலில் தலைமை அர்ச்சகராக பணிபுரிந்து வந்த வெங்கட ராமாராவ் என்பவர் வழக்கம் போல கோவிலை திறந்து சிவலிங்கத்துக்கு பூஜை செய்துள்ளார். அப்போது திடீரென சிவலிங்கத்தின் மீது அவர் சரிந்து விழுந்துள்ளார். பதறிப் போன சக அர்ச்சகர்கள் அவரை தூக்கி நிறுத்த முயற்சித்த போதும், மீண்டும் அவர் சிவலிங்கத்தின் மீது விழுந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அர்ச்சகர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி தற்போது வைரலாகி வருகிறது.