எந்த பட்டனைத் தட்டினாலும் பாஜகவுக்கு ஓட்டு: மாயாவதி
உத்தரப்பிரதேச தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரந்தில் முறைகேடு நடைபெற்றதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, பாஜகவைத் தவிர வேறு எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதை பதிவு செய்து கொள்ளவில்லை என்றே எண்ணுகிறேன். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில் பாஜகவின் வெற்றி இதற்கு சாட்சி என்று தெரிவித்தார். வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தவிர்த்து வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தலை சந்திக்கும் துணிவு இருக்கிறதா என்று பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பிய அவர், வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் பகுஜன் சமாஜ் கட்சி குறைந்தது 80 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது. பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி முகம் கண்டிருக்கிறது.