குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆட்சி நடத்துகின்றன. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பாக குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஜூலை 17 ஆம் தேதி குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பாக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பாஜக கேட்டுக்கொண்டது. ஆனால் அதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றன.
இதனிடையே எதிர்க்கட்சிகள் சார்பில் அம்பேத்கரின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரகாஷ் அம்பேத்கரை எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக அறிவிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சி எடுத்துவருகின்றன. அவரைத் தவிர்த்து மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா, காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரும் வேட்பாளர் பரிசீலனையில் உள்ளனர்.