ஜல்லிக்கட்டு நடந்தால் குடியரசுத்தலைவர் ஆட்சி: பிரதமருக்கு பீட்டா கடிதம்
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என பல அமைப்புகள் கூறி வருகின்றன. நாம் தமிழர் கட்சி சார்பாக ஜல்லிகட்டுக்கு ஆதரவாக நேற்று கடலூரில் தடையை மீறி ஜல்லிகட்டு போட்டி நடத்தப்பட்டது. இதேபோல் மதுரை மாவட்டம் கரிசல் குளத்தில் இன்று காலை தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 22 காளைகள் பங்கேற்றன.
இந்நிலையில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு பீட்டா அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காளைகளை ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் எனக் கூறியுள்ளது. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் பீட்டா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.