
ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒவ்வொரு இந்தியருக்கும் புனிதமான நாள் எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 72வது சுதந்திர தின விழா நாளை கொண்டாப்படவுள்ளது. இதையொட்டி நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். அனைத்து இடங்களிலும் பயணிகள் பைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், “ஆகஸ்ட் 15 ஒவ்வொரு இந்தியருக்கும் புனிதமான நாள். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள் அனைவரையும் நினைவு கூறுகிறேன். நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஏழைகள் வறுமையில் இருந்து விடுபட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பெண்களின் திறமை வீடு, அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் வெளிப்படவேண்டும். பெண்களை அவர்கள் பாதையில் செல்லவிட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.