சிறார் வன்கொடுமைக்கு தூக்கு: குடியரசு தலைவர் ஒப்புதல்
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது, குஜராத்தின் சூரத்தில் ஒரு சிறுமியும் பாலியல் வன்கொடுமைப்படுத்தப் பட்டு கொல்லப்பட்டது, உத்திரபிரதேசத்தின் Unnao-வில் சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது என அடுத்தடுத்து நிகழும் கொடூர செயல்களை தொடர்ந்து, போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தற்போது அதிகபட்சமாக ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப் படுகிறது. இதுபோன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன. இதையடுத்து குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இந்த சட்டத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துள்ளார்.