முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
முத்தலாக் முறைக்கு எதிரான அவசர சட்டத்திற்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், 3 முக்கிய திருத்தங்களுடன் இந்த முத்தலாக் தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டோர் உடனடியாக ஜாமீன் பெற முடியாது என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட்டிடம் சென்று ஜாமீன் பெறலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முத்தலாக் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும் என சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், முத்தலாக் முறையை குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது.