பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்: பிரணாப்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சியின் வேகம் தற்காலிகமாக குறைந்தாலும், வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 68ஆவது குடியரசுதினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடையே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். நாட்டின் 68ஆவது குடியரசுதின வாழ்த்துகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வசித்துவரும் இந்திய குடிமக்களுக்கு தெரிவித்து அவர் தனது உரையைத் தொடங்கினார். அவர் தனது உரையில், உலக அளவில் மிகவேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தினை நமது நாடு கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். அறிவியல், தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் 2ஆவது மிகப்பெரிய சக்தியாக இந்தியா விளங்குவதாக பெருமிதம் தெரிவித்தார். நாட்டுக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குவதாகக் குறிபிட்ட பிரணாப், டிஜிட்டல் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகள் நாட்டின் நலனுக்கு நன்மை பயக்கும் என்று குறிப்பிட்டார். நாட்டிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த குடியரசுத் தலைவர், நாட்டிலுள்ள ஐந்தில் ஒருபங்கு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்துவருவதாகவும் குறிப்பிட்டார். அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை, ராணுவ பலத்தில் நமது நாடு நான்காவது இடத்தில் உள்ளது என்றும் பிரணாப் தனது உரையில் குறிப்பிட்டார்.