அண்ணன் மகனுக்கு சீட்: பாஜக மீது அதிருப்தி.. ராஜினாமா செய்த அமைச்சர்.. யார் இந்த பசுபதி குமார் பராஸ்?

மத்திய அமைச்சராக இருந்த பீகாரின் பசுபதி குமார் பராஸின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுபதி குமார் பராஸ்
பசுபதி குமார் பராஸ்ட்விட்டர்

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராம்விலாஸின் சகோதரர்

நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளிடமும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. இந்த நிலையில், பீகாரில் மத்திய அமைச்சர் ஒருவர் தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அமைச்சராக இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பசுபதி குமார் பராஸ், தமது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முக்கு அனுப்பி இருந்தார். அவருடைய ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு உணவுப் பதப்படுத்தும் தொழில் துறையை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமன உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.

பசுபதி பராஸ், சிராக் பஸ்வான்
பசுபதி பராஸ், சிராக் பஸ்வான்ட்விட்டர்

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?

பீகார் மாநிலத்தில் லோக் ஜனசக்தி என்ற கட்சியின் தலைவராக இருந்தவர் ராம் விலாஸ் பஸ்வான். இவர், கடந்த 2020ஆம் ஆண்டு மரணமடைந்தார். ராம் விலாஸின் மரணத்திற்குப் பிறகு அவருடைய சகோதரர் பசுபதி குமார் பராஸுக்கும், ராம் விலாஸின் மகனான சிராக் பஸ்வானுக்கும் மோதல் முற்றியது. இதன் காரணமாக லோக் ஜனசக்தி கட்சிப் பெயரும் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. இதையடுத்து ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை பசுபதி பராஸும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) என்ற கட்சியை சிராஜ் பஸ்வானும் தொடங்கினர். இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் பீகாரின் தனித் தொகுதியான ஹாரின் ஹாஜிபூர் தொகுதியில் பசுபதி குமார் பராஸ் மீண்டும் போட்டியிட விரும்பினார். ஆனால், அந்த தொகுதியை இந்த முறை ராம் விலாஸ் மகன் சிராக் பஸ்வானுக்கு பாஜக ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகுதியில்தான் மறைந்த ராம் விலாஸ் 8 முறை வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பசுபதி குமார், தன் அண்ணண் மகனை எதிர்த்து அதே தொகுதியில் சுயேட்சையாகவோ அல்லது காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியிலோ இணைந்து போட்டியிடலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: அன்று இந்திரா காந்தி.. இன்று மோடி.. தேர்தல் நடத்தை விதியை மீறியதாகக் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?

பசுபதி குமார் பராஸ்
பீகார்: மாயமான 6 எம்எல்ஏக்கள்.. மாறிய 3 பேர்.. ஆட்சியைத் தக்கவைத்த நிதிஷ்.. நீக்கப்பட்ட சபாநாயகர்!

முன்னதாக ராஜினாமா குறித்துப் பேசிய பசுபதி, “எனக்கும் எங்களின் கட்சிக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். அதேநேரத்தில், பீகார் பாஜக தலைவர் சாம்ராட் செளத்ரி, "பசுபதி பராஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த பசுபதி குமார் பராஸ்?

லோக் ஜனசக்தி கட்சியை உருவாக்கிய ராம்விலாஸ் பஸ்வானின் இளைய சகோதரர்தான் இந்த பசுபதி குமார் பராஸ். ராம்விலாஸ் பஸ்வானின் மரணத்திற்குப் பிறகு, கட்சித் தலைவர் பதவிக்காக அவருடைய மகன் சிராக்கிடம் ஏற்பட்ட மோதல் காரணமாக முக்கியத்துவம் பெற்றார். 2021இல் லோக் ஜனசக்தி உடைந்து இருவரும் தனித்தனியாக வேறுவேறு கட்சிகளை ஆரம்பித்தனர். எனினும் அதற்கு முன்பாகவே 1977ஆம் ஆண்டு முதல் அலாலி தொகுதியில் இருந்து பீகார் சட்டப்பேரவைக்கு 7 முறை தேர்வு செய்யப்பட்டவர் பசுபதி குமார். இதில் மாநிலத்தில் மூன்று முறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2019 தேர்தலில் எம்.பியான இவர், 2021 முதல் மத்திய அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.

இதையும் படிக்க: “வழக்கு விசாரிக்கும் போதே கொண்டுவந்தது ஏன்” - CAA-க்கு எதிராக 236 மனுக்கள் - சூடிபிடித்த விசாரணை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com