
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் பேசிய அவர், "நமது நாட்டில் பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுவதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதார வளர்ச்சி குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்களின் நிலையை வலுப்படுத்துகிறது. பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சக குடிமக்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். நமது சகோதரிகள் மற்றும் நாட்டின் மகள்கள் துணிச்சலான சவால்களை வென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நமது சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்களில் பெண்களின் வளர்ச்சியும் முக்கிய அங்கமாக இருந்தது'' என்றார்.
தொடர்ந்து அவர் சரோஜினி நாயுடு, அம்மு சுவாமிநாதன், ரமா தேவி, அருணா ஆசப்-அலி, சுசேதா கிரிப்லானி போன்ற தலைவர்களை உதாரணம் காட்டி, இந்தியாவின் மகள்களான பெண்கள் தங்களின் வாழ்வில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர், ''பாரத மாதாவுக்காக பெண்களும் தனது உயிரை பரிசாக அளித்துள்ளனர். தேசத்தந்தை காந்தி மேற்கொண்ட சத்தியாகிரகத்தின் எல்லா கடினமான சூழலிலும் கஸ்தூரிபாய் உடன் இருந்தார்.
ஒவ்வொரு இந்தியனும் சமமான குடிமகன் ஆவார். இந்த மண்ணில் ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்பு, உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளன. சாதி, மதம், மொழி, மாநிலம், தொழில், குடும்பங்களின் அடிப்படையில் நமக்கு தனித்தனியாக அடையாளங்கள் உள்ளன. ஆனால், அனைத்துக்கும் மேலாக நமக்கு எல்லாம் ஒரு அடையாளம் உள்ளது. இந்திய குடிமகன் என்ற அடையாளமே அது. நாம் அனைவரும் சமம். அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை, சமமான கடமைகள் உள்ளன.
இன்று, இந்தியா உலக அரங்கில் தனக்கான சரியான இடத்தைப் பெற்றுள்ளது மட்டுமல்லாமல், உலக அரங்கிலும் தனது நிலையை உயர்த்தியிருப்பதைக் காண்கிறோம். உலகம் முழுவதும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
சர்வதேச மன்றங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது. குறிப்பாக ஜி-20 தலைமை பதவி. ஜி-20 அமைப்பு, உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கை பிரதிநிதித்துவப்படுத்துவதால், உலகளாவிய உரையாடலை சரியான திசையில் கொண்டு செல்ல இது ஒரு தனித்துவமான வாய்ப்பாகும்'' என்று உரையாற்றினார்.