சிறப்பு அந்தஸ்து நீக்கத்தால் காஷ்மீரில் இனி வளர்ச்சி ஏற்படும் - குடியரசுத் தலைவர்
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அறிவியல் வளர்ச்சியில் மகாகவி பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டி பேசினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம், அம்மாநிலம் மிகுந்த பலனை அடையும் எனக் கூறினார். நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்கள் அனுபவிக்கும் அதே உரிமைகள், சலுகைகள் மற்றும் வசதிகளை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களும் பெறுவார்கள் எனத் தெரிவித்தார். 1947 ஆம் ஆண்டுக்கு முன், தேச விடுதலையே அனைவரின் கனவாக இருந்தது என்றும், ஆனால், தற்போதோ வளர்ச்சி, வெளிப்படையான மற்றும் ஆக்கப்பூர்வமான ஆட்சி ஆகியவையே கனவாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
மகாகவி பாரதியாரின் கவிதையை மேற்கொள்காட்டி பேசிய ராம்நாத் கோவிந்த், நூறு ஆண்டுகளுக்கு முன் அவர் பாடிவிட்டு சென்றபடி அறிவியலில் தேசம் முன்னேறத் தொடங்கியிருப்பதாக கூறினார். வானை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என பாரதியார் பாடியபடி அறிவியலிலும், பிற உயிரினங்களை காப்பத்திலும் தேசம் முன்னேறி வருவதாக பெருமை படத் தெரிவித்தார்.