ரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி கழுத்தை நெறித்து கொலை!
ரயிலில் சிகரெட் பிடித்தவரை கண்டித்த கர்ப்பிணி பெண் கழுத்தை நெறித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் நடக்கும் சத் பூஜை (Chhat puja) யில் கலந்து கொள்வதற்காக பஞ்சாபில் இருந்து ஜாலியன்வாலாபாக் எக்ஸ்பிரஸ் ரயிலில், கர்ப்பிணிப் பெண் சினத்தேவி (45) என்பவர் தனது குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தார். பொது கம்பார்ட்மென்ட் என்பதால் அதில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் எல்லோர் முன்பும் சிகரெட் பிடித்துள்ளார்.
சிகரெட் புகை அந்த பெட்டியில் இருந்தவர்களுக்கு சிரமத்தைக் கொடுக்க, யாரும் கண்டுகொள்ளாமல் முகத்தைச் சுளித்தபடி இருந்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாத, சினத்தேவி, ரயிலில் சிகரெட் பிடிக்க எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கோபத்தில் சினத்தேவியின் கழுத்தை பலமாக நெறித்தார். இதைக் கண்ட மற்ற பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். சிலர் அந்த வாலிபரை பிடித்து இழுத்தனர். அதற்குள் சினத் தேவி மயங்கி விழுந்ததை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் சோனு யாதவ் என்பது தெரிய வந்தது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.