பீகார் | ”அதே கூட்டணி தான்.. ஆனா அடுத்த முதல்வர் நிதீஷ் அல்ல..” சவால் விட்ட பிரசாந்த் கிஷோர்
பீகாரில் பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தச் சூழலில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என இப்போதே பேச்சுகள் கிளம்பி வருகின்றன.
வரும் தேர்தலில் நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பாஜக விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், அதை எதிர்த்து தாமே மீண்டும் முதல்வர் வேட்பாளராக நிற்போம் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இது, பீகாரில் தற்போது புயலைக் கிளப்பியுள்ளது. ஒருவேளை இதற்கு பாஜக இசைவு தராவிட்டால், அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரபல தேர்தல் வியூக கணிப்பாளரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், “பீகாரில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார் பாஜகவுடனேயே கூட்டணி வைத்து போட்டியிடுவார்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “அவர் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பதவியில் இருக்க முடியாத அளவுக்கு செல்வாக்கற்றவராக மாறிவிட்டார். சட்டசபைத் தேர்தல்கள் முடிந்த பிறகு, நவம்பர் மாதத்தில் நிதிஷ் குமாரைத் தவிர யார் வேண்டுமானாலும் முதலமைச்சராவர். அதை நான் உறுதியாகச் சொல்கிறேன். அப்படி, நான் கணித்தது தவறென நிரூபிக்கப்பட்டால் நான் எனது அரசியல் கட்சியிலிருந்து விலகுகிறேன்.
நிதிஷ் குமாரின் புகழ் குறைந்து வருவதால்தான், அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதில் பாஜக தயக்கம் காட்டுகிறது. தேர்தலுக்குப் பிறகு நிதிஷ் 5 ஆண்டுகளுக்கு முதல்வராக நியமிக்கப்படுவார் என பிரதமர் மோடியும், அமித் ஷாவும் அறிவிக்க வேண்டும் என நான் சவால் விடுகிறேன்” என்றார்.
தொடர்ந்து அவர், “பாஜக மீண்டும், நிதிஷ் குமாருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்த பிறகு, அவர் கட்சி மாற முயற்சிக்கலாம். ஆனால் ஜேடியு வென்ற இடங்களின் எண்ணிக்கை மிகவும் மோசமாக இருக்கும். அவர் எந்த அமைப்பில் சேர்ந்தாலும் அவருக்கு உயர் பதவி கிடைக்காது. ஒரு துண்டு காகிதத்தைப் பார்க்காமல், தனது சொந்த அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் பெயர்களை உச்சரிக்குமாறு நான் நீண்டகாலமாக அவரிடம் சவால் விடுத்து வருகிறேன். அதிகாரிகள் சொல்லாவிட்டால், அவர் சுற்றுப்பயணம் செய்யும் மாவட்டத்தின் பெயரை அவரால் சொல்ல முடியாது. இத்தகைய மனநிலையுடன், அவர் பீகாரை ஆட்சி செய்வது துரதிர்ஷ்டவசமானது.
கடந்த ஆண்டு, பல முதலமைச்சர்கள் முன்னிலையில், புதிய மத்திய அரசு பதவியேற்றபோது, மோடியின் கால்களைத் தொட்டு வணங்கியதன் மூலம் நிதிஷ் குமார் பீகாருக்கு அவப்பெயரை ஏற்படுத்தினார். பிரதமர் மீது அவருக்கு அவ்வளவு மரியாதை இருந்தால், அவர் தனிப்பட்ட முறையில் பிரதமரின் கால்களைத் தொட்டிருக்கலாம். ஆனால், நாற்காலியில் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டுமே அவர் முகஸ்துதி செய்து வருகிறார். மத்தியில் ஆட்சியில் நீடிக்க ஜே.டி.(யு)வின் ஆதரவை நம்பியுள்ள பாஜகவுடனான தனது செல்வாக்கை, பீகாரில் நலிவடைந்த சர்க்கரைத் தொழிலை மீட்டெடுக்க ஏன் அவர் பயன்படுத்தவில்லை” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.