சோனியா காந்தி-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு வியூகம்?

சோனியா காந்தி-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு வியூகம்?
சோனியா காந்தி-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு வியூகம்?

2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விளக்கமளித்தார் தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வருகிற 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை டெல்லி ஜன்பத்தில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மூத்த தலைவர்களான திக்விஜய் சிங், அஜய் மக்கான், அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வலுவாக இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் மற்றும் அதனுடைய கூட்டணிக் கட்சிகள் என்னென்ன நடவடிக்கைகளை தற்போது முதலே தொடங்க வேண்டும், மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை முழுமையாக ஒருங்கிணைப்பது, காங்கிரஸ் அணியில் இல்லாத கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார். விரைவில் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெறுவது தொடர்பாகவும் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆலோசனைக்குப்பிறகு பிரசாந்த் கிஷோர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியின் இல்லத்தில் இருந்து புறப்பட்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், இன்றைய தினம் பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வருகிற 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளார். அவர் முன்வைத்த திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைக்கும் குழு ஆராய்ந்து இறுதி முடிவை ஒரு வாரத்தில் கட்சித் தலைவரிடம் அறிக்கை சமர்பிக்கும் எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.சி.வேணுகோபால் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் வியூகம் வகுக்க பணியாற்றுவாரா? அல்லது கட்சியில் சேருவாரா என்ற கேள்விக்கு ஒரு வாரத்தில் அனைத்து பதில்களும் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகவ் சதா கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவுக்கு மாற்றாகவும், சவால் அளிக்கும் வகையில் இருப்பார். காங்கிரஸ் கட்சி இறந்த குதிரை போன்றது. இறந்த குதிரைக்கு கசையடி கொடுப்பதில் அர்த்தமில்லை என சோனியாகாந்தி உடனான பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு குறித்து விமர்சனம் செய்துள்ளார். பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்றி வலுவாக உள்ள பாரதிய ஜனதா கட்சியை 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடித்து காங்கிரஸ் கட்சியை அரியணையில் அமர்த்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

- விக்னேஷ் முத்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com