காங்கிரஸில் சேர பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு - இந்த முறை ஆலோசகர் இல்லை! முக்கிய லீடர் பதவி

காங்கிரஸில் சேர பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு - இந்த முறை ஆலோசகர் இல்லை! முக்கிய லீடர் பதவி
காங்கிரஸில் சேர பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு - இந்த முறை ஆலோசகர் இல்லை! முக்கிய லீடர் பதவி
Published on

பிரபல தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேருமாறு அக்கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவரை கட்சியின் முக்கியமான தலைவர் பொறுப்பில் இருந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். இந்த தேர்தல்களில் அந்தக் கட்சிகள் பெரிய அளவிலான வெற்றியை பெற்றன. இதையடுத்து, பிரசாந்த் கிஷோரின் செல்வாக்கு மேலும், உயரத் தொடங்கியது. பல தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோரை அணுகி வருகின்றன.

இன்னும் சில கட்சிகள், பிரசாந்த் கிஷோரை தங்கள் கட்சியில் சேருமாறு கேட்டு வருகிறது. இதற்கு முன்னதாக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். ஆனால், நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து அவர் விலகினார். அதன் பிறகு, அவர் எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.

இந்நிலையில், அடுத்து வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சிக்கு சில ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் அண்மையில் வழங்கியதாக தெரிகிறது. டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மிக முக்கியமான தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; எப்படிப்பட்ட பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும், எந்தெந்த மக்களவைத் தொகுதிகளில் தனித்து போட்டியிட வேண்டும், எங்கெங்கு கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் ஆகியவை குறித்து விரிவான ஆலோசனையை அவர் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பெண்கள் மற்றும் இளைஞர்களை மையப்படுத்தி பிரசாரத்தை அமைக்குமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதையடுத்து, அவரது ஆலோசனைகளை ஆய்வு செய்ய பிரத்யேக குழுவை அமைக்கவிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேருமாறும் கட்சித் தலைமை அழைப்பு விடுத்ததாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். அவரை தலைமை நிகர் பொறுப்பில் இருந்து செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com