புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் நாளை பதவி ஏற்பதை அடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இன்று வெளியேறும் பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம் தங்கியிருந்த பங்களாவில் குடியேறுகிறார்.
பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த வாரம் நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் புதிய குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார். நாட்டின் 14 வது குடியரசுத் தலைவராக அவர் நாளை பதவி ஏற்கிறார். இதையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பிரணாப் முகர்ஜி இன்று வெளியேறி டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள 10ம் எண் கொண்ட அரசு பங்களாவில் குடியேறுகிறார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தான் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், இங்குதான் வசித்து வந்தார். 2015 ம் ஆண்டு மரணம் அடையும் வரை இங்குதான் தங்கியிருந்தார். பின்பு இந்த பங்களா, மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டது. பிரணாப் முகர்ஜி இங்கு குடிவருவதால் மகேஷ் சர்மா, வேறு இடத்தில் குடியேறுகிறார்.
பிரணாப் முகர்ஜி சிகரெட் பைப் பிடிக்கும் பழக்கம் கொண்டவர். உடல் நலம் கருதி டாக்டர்கள் கைவிடும்படி கேட்டுக்கொண்டதால் கைவிட்டுவிட்டார். அவருக்கு அன்பளிப்பாக கிடைத்த 500 க்கும் மேற்பட்ட வித விதமான சிகரெட் பைப்புகளை சேகரித்து பாதுகாத்து வைத்திருந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறுவதால் அவற்றை அங்குள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளார் பிரணாப்.