“மன்மோகன் சிங்கிற்கு நினைவு சின்னம் கோருவோர் என் தந்தை மறைவுக்கு..”- பிரணாப் முகர்ஜி மகள் அதிருப்தி
மன்மோகன் சிங்கிற்கு நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி தலைமை, தன் தந்தை மறைவின் போது இரங்கல் கூட்டம் கூட நடத்தவில்லை என பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூக தளத்தில் பதிவு ஒன்றை சர்மிஷ்டா இட்டுள்ளார். அதில் “எனது தந்தை இறந்த போது அஞ்சலி செலுத்தப்படாதது குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவரிடம் வினவியபோது ‘குடியரசுத்தலைவர்களுக்கு இந்த நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை’ என கூறினார். ஆனால் குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் மறைந்த போது காங்கிரஸ் செயற்குழுவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இது பின்னரே எனக்கு தெரியவந்தது” என சர்மிஷ்டா கூறியுள்ளார்.
மேலும், “உண்மையில் அந்த இரங்கல் தீர்மானத்தை கொண்டு வந்ததே என் தந்தை பிரணாப் முகர்ஜிதான்” என்றம் சர்மிஷ்டா குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மன்மோகன் சிங்கிற்க்கு நினைவு சின்னம் அமைப்பது சிறந்த யோசனை என தன் அடுத்தடுத்த பதிவுகளில் விளக்கியுள்ளார். காங்கிரஸ் தலைமையை நோக்கி கேள்வி எழுப்புவதே அவரின் முதன்மையான நோக்கமாக இருப்பது, அப்பதிவுகளின் வழியே தெரிய வந்துள்ளது.
காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவருமான பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவராக இருந்ததும் 4 ஆண்டுகளுக்கு முன் அவர் காலமானதும் குறிப்பிடத்தக்கது