'கவனத்துக்குரிய' கருணை மனுக்களை நிராகரித்தது ஏன்? - புத்தகத்தில் பிரணாப் சொல்லும் உண்மைகள்

'கவனத்துக்குரிய' கருணை மனுக்களை நிராகரித்தது ஏன்? - புத்தகத்தில் பிரணாப் சொல்லும் உண்மைகள்
'கவனத்துக்குரிய' கருணை மனுக்களை நிராகரித்தது ஏன்? - புத்தகத்தில் பிரணாப் சொல்லும் உண்மைகள்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தாம் அந்தப் பொறுப்பை வகித்தபோது நடந்த சம்பவங்கள், அனுபவங்கள் குறித்து `தி பிரசிடென்ஷியல் இயர்ஸ் 2012 - 2017' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இதில், அவர் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்திய அரசியல் வரலாற்றில், பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பொறுப்பு வகித்த காலத்தில்தான் அதிகளவு கருணை மனுக்கள் வந்ததும், அதை நிராகரித்த சம்பவங்களும் நிகழ்ந்தன. குடியரசுத் தலைவராக இருந்தபோது தன்னிடம் வந்த கருணை மனுக்களை நிராகரித்தது ஏன் என்று அந்தப் புத்தகத்தில் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

அஜ்மல் கசாப்

'26/11 மும்பை படுகொலையை நிறைவேற்றியவர்களில் ஒருவரான அஜ்மல் கசாப்பின் கருணை மனு இந்தியாவில் அதிக கவனத்தை ஈர்த்த ஒன்று. அஜ்மல் கசாப் போன்ற இளம் வயதுடைய ஒருவர் பெரிய அளவிலான வன்முறையின் பாதையை ஏற்றுக்கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிடிபட்டால் தூக்கிலிடப்படுவோம் என்று அஜ்மல் அறிந்திருந்தார். இருந்தும் அவர் பயங்கரவாத தாக்குதலை நடத்தினார். அவரைப் போன்றவர்கள் தங்கள் கையாளுபவர்களிடமிருந்து பெறும் பயிற்சி மற்றும் மூளைச் சலவை காரணமாக தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

ஆனால், இந்தக் காரணிகள் எதுவும் பயங்கரவாத தாக்குதலின் உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட எனது முடிவெடுப்பதை பாதிக்கவில்லை. ஏனென்றால், விசாரணை நீதிமன்றத்தால் அஜ்மலுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ஒருமனதாக உறுதி செய்தன. அஜ்மல் கசாப்பின் கருணை மனு எனக்கு முன்னர் குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் காலகட்டத்தின்போதே நிலுவையில் இருந்தது. இதனால், அதை தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

அஜ்மல் தூக்கிலிடப்பட்ட நேரம் மற்றும் தேதி பற்றி எனக்கு முன்பே தெரியாது. மத்திய உள்துறை தலைமை மூலம் காய்கள் நகர்த்தப்பட்டு மரணதண்டனை மும்பையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய சந்தர்ப்பங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன. அவை கடைபிடிக்கப்பட்டன என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, அவருடைய கருணை கோரிக்கையை நான் நிராகரித்தவுடன் எனது பங்கு முடிந்தது.

அப்சல் குரு

இவர்களின் வழக்கின்போது பாஜக அப்போது எதிர்க்கட்சியில் இருந்தது, மேலும் தாமதமின்றி அப்சலை தூக்கிலிட வேண்டும் என்று கோரியது. இவர்களது கருணை மனு முதலில் என்னிடம் வரவில்லை. இதுவும் எனக்கு முன்னால் இருந்தவர்களிடம்தான் முதலில் சென்றது. 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலில் அப்சல் குரு பங்கு வகித்ததற்காக குற்றவாளி என அறிவிக்கப்பட்டார், அவருடைய கருணை மனுவை நான் நிராகரித்த பின்னர் பிப்ரவரி 2013 இல் தூக்கிலிடப்பட்டார். சில உரிமைக் குழுக்கள் அவருக்கு போதுமான சட்ட பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும், அவரது மரண தண்டனை ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறி குரல்கள் எழுப்பினர்.

அவரது மரண தண்டனைக்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யு) இடதுசாரிகள் மற்றும் சில ஆர்வலர்கள் பிரசாரம் செய்தனர். மேலும் இந்த மரணத் தண்டனையில் ``ரகசியமாக மறைக்கப்பட்டது" என்பது மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியது. ஆனால் அதற்கு காரணம், அவரின் வழக்கின் தன்மைதான். வழக்கு பல கட்டங்களை கடந்து சென்றது. அப்சல் குரு டிசம்பர் 2001ல் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். மேலும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பின்னர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், 2002 (பொடா) ஆகியவற்றின் பல்வேறு விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். இடையில் வழக்கறிஞர் பின்வாங்கியது, வாக்குமூல விவகாரம் என அப்சல் குரு விவகாரம் ஒரு சர்ச்சைக்குரியதாகவே இருந்தது.

எனினும் ஒரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த அன்றாட விசாரணையைத் தொடர்ந்து ஆறு மாதங்களில் அவரின் வழக்கு முடிந்தது. அப்சலுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்தது. இதன்பின்தான் என் முன் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். நவம்பர் 2012 இல், அப்சல் குரு உட்பட ஏழு வழக்குகளை நான் மீண்டும் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்தேன். கருத்தை மறுஆய்வு செய்யுமாறு அப்போதைய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடம் கேட்டுக்கொண்டேன். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் மரண தண்டனையை நிறைவேற்ற கோரி தனது இறுதி பரிந்துரையை வழங்கினார். இதன்பின் கருணை மனுவை நான் நிராகரித்தேன், பிப்ரவரி 2013 இல் அப்சல் தூக்கிலிடப்பட்டார்.

யாகூப் மேமனின் சர்ச்சைக்குரிய மரண தண்டனை!

மேலே சொன்ன வழக்குகளை போன்றே யாகூப் மேமனின் வழக்கும் சர்ச்சைக்குரியது. அவர் ஜூலை 2015-இல் தூக்கிலிடப்பட்டார். 1993 மும்பை குண்டு குண்டுவெடிப்பு வழக்கில் 2007 ஆம் ஆண்டில் சிறப்பு பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பயங்கரவாத தாக்குதல்கள், சீர்குலைக்கும் நடவடிக்கைகள் மற்றும் கொலை செய்வதற்கான குற்றவியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக யாகூப் இருந்ததை நீதிமன்றம் கண்டறிந்தது. தவிர, சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் முன் மேமனின் மேல்முறையீடு வெற்றிபெறவில்லை. ஏனெனில், அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நீதிமன்றம் உறுதிசெய்தது. பயங்கரவாத குண்டுவெடிப்பின் பின்னணியில் அவர் ‘சூத்திரதாரி' மற்றும் ‘மூளையாக' இருந்தார் என்று நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தது. பின்னர் அவர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது. அதன் பின்னர் அவரது கருணை மனு கோப்பு என்னிடம் வந்தது. எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, ஜூலை 2015 இல் அவரது கோரிக்கையை நிராகரித்தேன். அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அப்போதைய சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆகியோருடன் நான் நடத்திய விரிவான கலந்துரையாடலின் பின்னணியில் எனது முடிவு வந்தது. ஆனால் விஷயம் இதோடு முடிவடையவில்லை.

மேமன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். மகாராஷ்டிரா ஆளுநருக்கு அனுப்பிய அவரது கருணை மனு முடிவு செய்யப்படும் வரை மரண தண்டனை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார். ஆம், மகாராஷ்டிரா கவர்னருக்கும் மனு கொடுக்கப்பட்டது. இந்தக் காலகட்டங்களில் எனது முடிவை மறுபரிசீலனை செய்ய கோரி, சில பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் கடிதம் எழுதியிருந்தனர். ஆனால் மேமனுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை.

மரண தண்டனைகளில் முடிவெடுக்க குழப்பம்?

அரசாங்கத்தின் பரிந்துரைகளுடன் எனக்கு வழங்கப்பட்ட கருணை வேண்டுகோள்களின் அனைத்து நிகழ்வுகளுக்கும் குடியரசுத் தலைவராக நான் என் மனதைப் பயன்படுத்திக் கொண்டாலும், அத்தகைய சந்தர்ப்பங்களில் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின்படி குடியரசுத் தலைவர் முடிவெடுக்கிறார் என்பதே உண்மை. கருணை மனுவை நிராகரிக்க அரசாங்கம் பரிந்துரைத்தால், குடியரசுத் தலைவர் ஒப்புக்கொள்ள வேண்டும்; ஒரு கருணை மனு ஏற்றுக்கொள்ளப்படுவதை அரசாங்கம் விரும்பினால், குடியரசுத் தலைவர் அவ்வாறு செய்கிறார். கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அன்றைய அரசாங்கம் பரிந்துரைத்தால், குடியரசுத் தலைவராக நான் வழியில் நிற்கக்கூடாது என்று நான் நம்புகிறேன்" என்று அந்தப் புத்தகத்தில் விவரித்துள்ளார் பிரணாப் முகர்ஜி.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Quint

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com