புதுச்சேரி முதல்வர் Vs துணைநிலை ஆளுநர் ஹெல்மெட் சர்ச்சை
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஹெல்மெட் அணியாமல் செல்லும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் பல மாதங்களாகவே கருத்து மோதல் நிலவி வருகிறது. இருவருக்கு அதிகாரப் போட்டி நடந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த மோதல் நீதிமன்றம் வரைகூட சென்றது.
சில மாதங்கள் முன்பு புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், துணை நிலை ஆளுநருக்கு, அதற்கான அதிகாரமில்லை என கடந்த ஏப்ரல் மாதமே உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை மோதல் போக்கு தொடர்ந்தபடியே உள்ளது.
இந்நிலையில் புதுவையிலுள்ள காமராஜ் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்தத் தொகுதி இடைத்தேர்தலுக்காக முதல்வர் நாராயணசாமி சில தினம் முன்னால் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது அவர், இருசக்கர வானத்தில் சென்று வாக்குகளை சேகரித்தார். வானகத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட புகைப்படம் ஒன்றை‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தியாக வெளியிட்டது.
அந்தப் பிரச்சாரத்தின் போது நாராயணசாமி ஹெல்மெட் அணியவில்லை. ஆகவே அந்தப் புகைப்படத்தை சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “மோட்டார் வாகன சட்டம் மீறப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுபவர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தை வெளியிட்ட பத்திரிகைக்கு நன்றி” எனக் கூறிய கிரண்பேடி, அதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு டேக் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று கிரண்பேடி இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்லும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல்வர் நாராயணசாமி “அறிவுரை சொல்வதற்கு முன்னால் நீங்கள் பயிற்சி செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.