5 ஆண்டுகளில் 9,438 பேர் மரணம்.. சாலைக் குழிகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு!
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தாக்கல் செய்த தரவுகளின்படி, 2020 முதல் 2024 வரை சாலைகளில் உள்ள குழிகள் மற்றும் பள்ளங்களால் 9,438 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், உத்தர பிரதேசம் அதிகபட்சமாக 5,127 உயிரிழப்புகளை சந்தித்துள்ளது.
சாலைகளில் உள்ள குழிகள் மற்றும் பள்ளங்களால் நேரும் உயிரிழப்புகள் குறித்த தரவுகளை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, கடந்த 2020 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சாலைகளில் உள்ள குழிகள் மற்றும் பள்ளங்களால் ஏற்பட்ட விபத்துகளில் 9,438 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டில் 1,555 ஆக இருந்த உயிரிழப்புகள், 2024இல் 2,385 ஆக அதிகரித்துள்ளன. இது சுமார் 53 விழுக்காடு உயர்வு ஆகும். நாடு முழுவதும் உயிரிழந்த 9,438 பேரில், 5,127 பேர் அதாவது பாதிக்கும் மேற்பட்டோர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
உத்தர பிரதேசத்துக்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் 969, தமிழ்நாட்டில் 612, ஒடிசாவில் 425, பஞ்சாபில் 414 மற்றும் அசாமில் 395 பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்றியப் பிரதேசங்களில் டெல்லியில் அதிகபட்சமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர பிரதேசம் மற்றும் பிகார் போன்ற பெரிய மாநிலங்கள், தங்கள் மாநிலத்தில் சாலைக் குழிகளால் ஒரு உயிரிழப்புகூட ஏற்படவில்லை எனப் பதிவு செய்துள்ளன. இது காவல் துறையின் தரவு சேகரிப்பில் உள்ள நம்பகத்தன்மை குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
2017இல் உச்ச நீதிமன்றத் தலையீடடுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் குறைந்திருந்த இத்தகைய உயிரிழப்புகள், தற்போது மீண்டும் அதிகரித்துவருவது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

