PUBG India-வை ப்ளே ஸ்டோரிலிருந்து திடீரென நீக்கிய கூகுள்! என்ன செய்யப்போகிறது Krafton?

PUBG India-வை ப்ளே ஸ்டோரிலிருந்து திடீரென நீக்கிய கூகுள்! என்ன செய்யப்போகிறது Krafton?
PUBG India-வை ப்ளே ஸ்டோரிலிருந்து திடீரென நீக்கிய கூகுள்! என்ன செய்யப்போகிறது Krafton?

பப்ஜி செயலியின் மறு உருவாக்கமான பேட்டில்க்ரௌண்ட்ஸ் மொபைல் இந்தியா செயலியை, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்களது ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளன எனத் தகவல் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த மாதத்தில் உத்தரப் பிரதேசத்தில் 16 வயது சிறுவனொருவன், `பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட விடாத’ காரணத்தினால் தன் தாயை சுட்டுக் கொலை செய்ததாக தகவல் வெளியானது.

இதுகுறித்து கடந்த வாரம் நடந்த கூட்டத்தொடரின்போது தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சில தகவல்கள் பகிர்ந்திருந்தன. அந்தத் தகவல்களே, தற்போது பேட்டில்க்ரௌட்ஸ் இந்தியா செயலி திடீரென நீக்கப்பட அடிப்படை காரணம் என சொல்லப்படுகிறது.

அந்த நிகழ்வு இதுதான் - கடந்த வாரம் மக்களவை உறுப்பினர் எம்.பி. விஜயசாய் ரெட்டி, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் `ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடும் சில குழந்தைகள், இதுபோன்ற விளையாட்டுகளால் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு ஊக்குவிக்கும் பப்ஜி போன்ற செயலிகளின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “ஏற்கெனவே இதுபோன்ற செயலிகள் தடைசெய்யப்பட்டன. ஆனால் அவை ஒருசில மாற்றங்களுடன் மீண்டும் உலா வருவதாகத தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு பல குற்றச்சாட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றின் உண்மைத்தன்மையை அறிய, அந்தப் புகார்களை உள்துறை அமைச்சகத்துக்கு நாங்கள் அனுப்பி வைத்தோம். அவர்கள் கொடுக்கும் முடிவுகள் அடிப்படையில் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

சமீபத்தில் சிறுவனொருவன், ஆன்லைன் விளையாட்டை விளையாட கொடுக்காததற்காக தன் தாயை கொலை செய்ததாக செய்திகள் வெளியாகின. அதுதொடர்பான உண்மைக் காரணத்தை கண்டறிய, விசாரணை நடந்து வருகின்றது. மற்றொரு பக்கம், பப்ஜியை தடைசெய்யும் கோரிக்கையும் எழுந்துள்ளது. பப்ஜியை, மத்திய அரசு 2020-லேயே (`இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு இச்செயலி பாதகமானது’ என்பதன் கீழ்) தடை செய்துவிட்டது. அப்போதிருந்து பப்ஜி இந்தியாவில் இல்லை” என்றார். இந்த விளக்கத்தில் Battlegrounds Mobile India செயலி குறித்து குறிப்பிட்டு அவர் எதுவும் சொல்லவில்லை.

இந்நிலையில்தான் நேற்று இரவு முதல் Battlegrounds Mobile India செயலி திடீரென ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இது எதனால் நடந்தது என்பது பற்றி இதுவரை முறையான அறிவிப்புகள் இல்லை. இத்துடன் சேர்த்து சுமார் 117 செயலிகள் நீக்கப்பட்டிருக்கிறது. இந்த திடீர் நீக்கம் தொடர்பாக இச்செயலியை உருவாக்கிய க்ராஃப்டன் நிறுவனம் சார்பில் பேசியுள்ள செய்தித்தொடர்பாளர்,

 “ பேட்டில்க்ரௌண்ட்ஸ் மொபைல் இந்தியா செயலி, கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து எப்படி நீக்கப்பட்டது என்பது பற்றி எங்களுக்கு விரிவான விவரங்கள் கிடைத்தபின், அதுபற்றி தெரிவிக்கிறோம்” எனக்கூறி இருக்கிறார். இதை கூகுள் நிறுவனமும் உறுதிசெய்துள்ளது.

சமீபத்தில்தான் இந்த Battlegrounds Mobile India செயலி 100 மில்லியன் டவுன்லோடுகளை கடந்திருந்தது. தங்கள் செயலியை நீக்கியது தொடர்பாக Battlegrounds Mobile India விரைவில் உள்துறை அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் அமைச்சகம் அளித்த பதிலுக்கும் இந்த திடீர் நீக்கத்துக்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com