
பிரதமர் தீபம் ஏற்றக் கூறியது குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக வீடியோ வெளியிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு காவல் துறையினர் நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் வீடியோ வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, இந்தியாவின் ஊரடங்கு அனைத்து நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றும் இந்த ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், 5-ஆம் தேதி அதாவது இன்று இரவு 9 மணியிலிருந்து 9:09 வரை அனைவரும் மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறினார். இதற்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றைய தினம் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் மோடி பேசியது குறித்து ஆபாசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோவில் “ பிரதமர் மோடி கூறுவதுபோல கைகளை கழுவினால் கொரோனா போய்விடுமா, அதுபோல் விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றினால் கொரோனா சாகுமா என்று பேசியது மட்டுமல்லாமல் பிரதமரை ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த வீடியோவை பார்த்த பாஜகவினர், ஆபாசமாக பேசிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். அந்த வகையில் இந்த புகாரை ஏற்று விசாரித்த மார்த்தாண்டம் போலீசார், இன்று இளைஞர்களின் வீட்டிற்கே சென்று அவர்களை கைது செய்தனர். மேற்கொண்டு விசாரித்ததில் அவர்கள் காங்கிரஸ் பொறுப்பாளர் நிதின், அபிஷ் மனு ,விஜின், பவின் நிஷாந்த் ஆகியோர் என தெரிய வந்தது.