நாட்டு வெடிகுண்டு தயாரித்த புதுச்சேரி ரவுடி - வெடித்து சிதறி விபத்து
புதுச்சேரியில் பிரபல ரவுடி ஒருவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது, எதிர்பாராத விதமாக அது வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே உள்ள உத்தரவாகினிபேட் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி. இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்நிலையில் துத்திப்பட்டு பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானம் பின்புறம் பாம் ரவி தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து இன்று அதிகாலை நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில் பாம் ரவியின் கைவிரல்கள் துண்டானது.
மேலும் அவனது கூட்டாளிகளின் கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாம் ரவி உள்ளிட்ட அவனது கூட்டாளிகளை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள வில்லியனூர் போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாம் ரவி மற்றும் அவனது கூட்டாளிகளிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.