‘தினமும் ரூ10 ஆயிரம்தான் ரொக்க பரிமாற்றம்’ - வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
வேட்பாளர்கள் தினமும் ரூ10 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக செலவிட வேண்டும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விடுத்துள்ளது.
சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மிஸோரம் மற்றும் தெலங்கானாவில் நடைபெறும் தேர்தல்களில் இருந்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை விடுத்து வருகிறது. அந்த வகையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது உள்ள குற்றவழக்குகள் குறித்து தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் மூன்று முறையாவது கட்டாயம் விளம்பரப்படுத்தவேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரப்புரைக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக செலவிடலாம் என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு முன்பு, நாளொன்றுக்கு 20 ஆயிரம் வரை ரொக்கமாக செலவிட கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டை விதித்திருந்தது.
ஆனால் வருமான வரிச்சட்டத்தில் கடந்த ஆண்டு மத்திய அரசு திருத்தம் செய்ததன் அடிப்படையில், தனது முந்தைய கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையமும் மாற்றியமைத்துள்ளது. அதன்படி, ஒருநாளில் பரப்புரைக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக செலவிட முடியும் என அறிவித்துள்ளது. மீத செலவுகளை வங்கிக் கணக்கு தொடர்புடைய காசோலை, வரைவோலை அல்லது மின்னணு பரிவர்த்தனை மூலமே மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.