“காவி நிறம் அடிக்க நினைத்தால் மக்கள் எதிர்ப்பார்கள்” - சர்ச்சையான இந்திய அணி உடை 

“காவி நிறம் அடிக்க நினைத்தால் மக்கள் எதிர்ப்பார்கள்” - சர்ச்சையான இந்திய அணி உடை 

“காவி நிறம் அடிக்க நினைத்தால் மக்கள் எதிர்ப்பார்கள்” - சர்ச்சையான இந்திய அணி உடை 
Published on

இந்திய அணிக்கு ஆரஞ்சு நிற ஜெர்ஸி வழங்குவதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நீல நிற வண்ணத்திலான ஜெர்ஸி உடன் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் ஒரே மாதிரியான நிறங்களைக் கொண்ட ஜெர்ஸி உடன் இரு அணிகள் விளையாடுவதை தவிர்க்கும் வகையில் புதிய திட்டத்தை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. 

அதன்படி, ஒரே நிறத்தைக் கொண்ட இரு அணிகள் விளையாடும் போது அதில் ஒரு அணி வேறு ஒரு நிறம் கொண்ட ஜெர்ஸியை பயன்படுத்த வேண்டும். நீலம் மற்றும் பச்சை நிறங்களுக்கு தான் இந்தச் சிக்கல் உள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளில் நீல நிற ஜெர்ஸி உடன் விளையாடும் இங்கிலாந்து மற்றும் பச்சை நிறத்துடன் விளையாடும் பாகிஸ்தான் அணிகளுக்கு விலக்கு உள்ளது. அந்த அணிகள் அதே சீருடையில் எல்லா போட்டிகளையும் விளையாடலாம்.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வேறு ஜெர்ஸி உடன் விளையாட உள்ளது. இந்திய வீரர்கள் ஆரஞ்சு நிற ஜெர்ஸி உடன் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்ஸி உடன் விளையாடுவதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய அணி வெற்றி பெற்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன், ஆனால், பிரதமர் நரேந்திர மோடி எல்லாவற்றிற்கும் காவி நிறம் அடிக்க பார்க்கிறார் என்று சமாஜ்வாதி எம்.எல்.ஏ அபு ஆஸ்மி சாடியுள்ளார். இதுகுறித்து, “இன்று ஜெர்ஸியை காவி மயமாக்க பார்க்கிறார்கள். ஒரு முஸ்லிம் தலைவர் தான் இந்தியாவின் மூவர்ண கொடிக்கு நிறங்களை முடிவு செய்தார். அப்படி நிறத்தை முடிவு செய்தால், மூவர்ணத்தையும் தேர்வு செய்யுங்கள். அப்பொழுது எந்தப் பிரச்னையும் இருக்காது. அதனைவிடுத்து எல்லாவற்றிற்கும் காவி நிறம் அடிக்க நினைத்தால் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்” என்று ஆஸ்மி தெரிவித்தார். 

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக எம்.எல்.ஏ ராம் காதம், “நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தை திசை திருப்ப எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன. இந்திய அணியின் ஜெர்ஸி நிறத்தை அரசியல் ஆக்க பார்க்கிறார்கள். ஏன் காவி நிறம் இருக்கக் கூடாதா?. ஏன் காவி நிறத்தை இந்த அளவுக்கு எதிர்க்கிறார்கள். ஜெர்ஸியின் வண்ணத்தை கிரிக்கெட் வீரர்களே செய்து கொள்ளட்டும்” என்று கூறினார். 

அதேபோல், சமாஜ்வாதி எம்.எல்.ஏ ஆஸ்மியின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ நாசீம் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “விளையாட்டு, கலாச்சாரம் அல்லது கல்வி எதுவாக இருந்தால் காவி அரசியல் உள்ளே வருவது துரதிருஷ்டமானது. மூவர்ண கொடி முதலில் மதிக்கப்பட வேண்டும். தற்போதைய அரசு நாட்டினை காவிமயமாக்கலை நோக்கி கொண்டு செல்கிறது. இது இந்தியாவின் ஒற்றுமையை சிதைத்துவிடும்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com