மகாராஷ்டிரா அரசியலில் அஜித் பவார் அதிரடியால் மீண்டும் சலசலப்பு!

சரத்பவாரின் சகோதரர் அஜித் பவார் சர்ச்சையான கருத்து தெரிவித்திருப்பதால், மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு உருவாகியுள்ளது.
sharad pawar, ajit pawar, supriya sule
sharad pawar, ajit pawar, supriya sulefile image

”மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி தயார்” என சரத்பவாரின் சகோதரரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அஜித் பவார் சர்ச்சையான கருத்து தெரிவித்திருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு உருவாகியுள்ளது.

sharad pawar
sharad pawarsharad pawar twitter page

ஒருபுறம், சரத்பவார் சமீபத்தில் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் கௌதம் அதானியை சந்தித்தது எதிர்க்கட்சிகளிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ள நிலையில், மற்றொருபக்கம் அஜித் பவார் இத்தகைய சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

அஜித் பவார், ”முதலமைச்சர் பதவியை கைப்பற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி அடுத்த வருட சட்டசபை தேர்தல் வரை காத்திருக்க தேவையில்லை. இப்போதே முதல்வர் பதவியை கைப்பற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி தயார்” என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்க்க போகிறார் என மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டதால், “நன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைவிட்டு விலக மாட்டேன்” என அஜித் பவார் விளக்கம் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

supriya sule
supriya suleANI

சரத்பவாரின் மகளான சுப்ரியா சூலே மற்றும் அஜித் பவார் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருவதாக மகாராஷ்டிரா அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர். ஆகவே, பிரபுல் பட்டேல் உள்ளிட்ட பலருடன் இணைந்து, அஜித் பவார் விரைவில் பாஜகவுடன் கைகோர்ப்பார் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர்.

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து வெளியேற அஜித் பவார் ஆலோசனை நடத்தி வருவதாக மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. முன்பு துணை முதல்வராக இருந்த அஜித் பவார், கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ajit pawar
ajit pawarajit pawar twitter page

தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க போதிய அளவு சட்டமன்ற உறுப்பினர்களை திரட்ட அஜித் பவார் முயற்சி செய்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில், சரத் பவார் மற்றும் சுப்ரியா சூலே தேசியவாத காங்கிரஸ் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அதிர்ச்சியில் உள்ள சில மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பாஜகவுடன் கைகோர்ப்பார்கள் எனவும் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. சிவசேனா கட்சியை உடைத்ததுபோலவே மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை உடைக்க பாஜக முயற்சி செய்து வருவதாக மகா விகாஸ் அகாடி கூட்டணி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஏற்கெனவே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அரசு அமைக்க, அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்ற நிலையில், அந்த கூட்டணி அரசு நிலைக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், ’சரத்பவார் உத்தரவுக்கே நாங்கள் கட்டுப்படுவோம்’ என தெரிவித்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் - அஜித் பவார் அரசு கவிழ்ந்தது.

பின்னர் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் மகா விகாஸ் ஆகாடி கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதல்வரானார். சரத்பவார் தனது சகோதரர் பாஜகவுடன் கைகோர்த்ததை மன்னிக்க, அஜித் பவார் மீண்டும் துணை முதல்வரானார்.

இந்நிலையில் பிரதமரின் கல்வித் தகுதி குறித்த சர்ச்சை தேவையற்றது என சமீபத்தில் கருத்து தெரிவித்த அஜித் பவார், கடந்த சில நாட்களாக பல நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் இவர் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார் ரகசியமாக பாஜகவின் மூத்த தலைவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார் எனவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து அவர் மகாராஷ்டிரா ஆளும் கூட்டணியில் இணைய உள்ளார் எனவும் மகா விகாஸ் ஆகாடி தலைவர்கள் பேசி வருகின்றனர். எப்படி, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை உடைத்தாரோ, அதேபோல அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து விடுவாரோ என்பது அவர்களின் அச்சம். பாஜக கூட்டணிக்கு ஏற்கெனவே பெரும்பான்மை உள்ளது என்றாலும், அஜித் பவார் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டணியில் இணைவது புதிய ஊக்கத்தை அளிக்கும் எனக் கருதப்படுகிறது.

அடுத்த வருட மக்களவைத் தேர்தல் மற்றும் அதற்குப் பிறகு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் எனப் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், கூட்டணி மேலும் வலுப்படுவது தற்போதைய சூழலில் சரியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும் சிவசேனா விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்புகளோ அல்லது வேறு நடவடிக்கைகளோ உத்தவ் தாக்கரே கோஷ்டிக்கு சாதகமாக இருந்தாலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு கோஷ்டி பாஜகவுக்கு ஆதரவாக இருப்பது மகாராஷ்டிரா அரசை வலுவுடன் வைத்திருக்கும் என ஆளும் கூட்டணியின் தலைவர்கள் கருதுகிறார்கள். சரத்பவார் அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்றக் குழு விசாரணை தேவையில்லை என தெரிவித்தது மற்றும் சமீபத்தில் அதானியை சந்தித்தது உள்ளிட்ட காரணங்களால் தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி கூட்டணியில் நீடிக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com