பஞ்சாப்பில் அரங்கேறும் அரசியல் நாடகங்கள் - தத்தளிக்கிறதா காங்கிரஸ்?
பஞ்சாபில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரிந்தர் சிங்குக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அம்மாநில அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன
பஞ்சாபில் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் பொறுப்பேற்றது முதல், முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவருக்கும் இடையே பிரச்னை நீடித்தது. ஒரு கட்டத்தில் கட்சியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனக் கூறி முதலமைச்சர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில முதலமைச்சராக பட்டியலின சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் நியமிக்கப்பட்டார். அமரிந்தர் சிங் பதவி விலகியதில் இருந்து நவ்ஜோத் சிங் மீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வந்தார்.
சித்துவை தேர்தலில் வேட்பாளராக அறிவித்தால், அவரை தோற்கடிப்பேன் என்றும் சித்து பாகிஸ்தானுடன் தொடர்புள்ள தேசவிரோதி என்றும் அமரிந்தர் காட்டமாக தெரிவித்தார். கட்சியில் நீண்ட நெடுங்காலமாக பணியாற்றி வரும் அமரிந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்கு நவ்ஜோத் சிங் சித்து தான் காரணம் என்ற விமர்சனமும் சித்து மீது எழுந்தது. இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து, அதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு, சித்து அனுப்பி வைத்துள்ளார். அதில் பஞ்சாப் காங்கிரஸ் மற்றும் பொதுமக்களின் நலனில் எந்த சமரசத்திற்கும் இடம் தரக்கூடாது என்பதற்காக ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து ராஜினாமா செய்த நிலையில், அமரிந்தர் சிங் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதால் அவர் பாரதிய ஜனதாவில் இணையப் போவதாக பேச்சுகள் அடிபட்டன. இதனால் பஞ்சாப் அரசியலில் பரபரப்பு தொற்றிய நிலையில், வேறு கட்சியில் இணையும் எண்ணம் தமக்கு இல்லை என டெல்லி சென்றடைந்த அமரிந்தர் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பஞ்சாப் மாநில முதலமைச்சர் வீட்டை காலி செய்வதற்காகவே தாம் வந்ததாகவும் அவர் விளக்கம் அளித்து, பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சித்துவின் ராஜினாமாவைத்தொடர்ந்து அவரது ஆதரவாளரான பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் ரஜியா சுல்தானாவும் ராஜினாமா செய்துள்ளார். அதேபோல பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் யோகிந்தர் திங்க்ரா பதவி விலகினார். சித்துவுக்கு ஆதரவாக ரஜியா சுல்தானா, யோகிந்தர் தொடர்ந்து பதவி விலகியிருப்பது அம்மாநிலத்தில் பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.