இளம் வாக்காளர்களை கவர சமூக வலைதளங்களில் தேர்தல் "கார்ட்டூன்கள்"
கடந்த தேர்தலைப் போலவே, எதிர்வரும் தேர்தலிலும் சமூக வலைத் தளங்கள் மூலம் இளம் வாக்காளர்களைக் கவர பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.
கேலிச் சித்திரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு பிறகு கருத்துச் சித்தரமாக மாறிய கார்ட்டூன்களுக்கு அச்சு ஊடகங்களில் மிகப் பெரிய வரவேற்பு உண்டு. காட்சி ஊடகங்கள் பெருகிப் போனதும், கார்ட்டூன்களின் தேவையும் அதன் பகிர்தலும் குறைந்தே போய் விட்டன. ஆனால், இந்தத் தேர்தல் களம் கார்டூனிஸ்ட்களின் மனக்கதவுகளை மீண்டும் தட்ட வந்திருக்கிறது. அச்சு ஊடகங்கள் வழியாக மட்டுமல்ல, காட்சி ஊடகத்தின் ஒரு பிரிவான சமூக வலைதளங்கள் வாயிலாகவும் கார்ட்டூன்கள் பரவ தொடங்கியுள்ளன.
பாரதிய ஜனதா கட்சி தாங்கள் நிர்வகிக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் தேர்தல் பரப்புரை மற்றும் எதிர்க்கட்சி நையாண்டிக்கு கார்ட்டூனிஸ்ட்களை நாடி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவிற்கு காட்டூன் வரையும் கார்ட்டூனிஸ்ட் கணேஷ் பலேரியோ ''தேர்தல் நேரத்தில் கார்ட்டூன்களின் அருமையை அரசியல் கட்சிகள் அறிந்து வருகிறது. காலை எழுந்ததும் நாளேடுகள் படிப்பது, செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்ப்பது, வாட்ஸ்அப் தகவல்களை காண்பது ஆகியவற்றின் மூலம் தினசரி கார்ட்டூன்களுக்கான ஐடியாவைப் பெறுகிறேன். தனது கார்ட்டூன்கள் பாரதிய ஜனதாவின் சமூக வலைத் தளப் பக்கங்களை அலங்கரிப்பதாகவும், அதற்கு வரும் கமென்ட்களில் இருந்தே, கார்ட்டூன்களின் மவுசு குறையவில்லை எனப் புரிவதாகவும் கூறுகிறார்.
வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் 35 வயதுக்கு உட்பட்டோர் என்பதால், இளைய வயதினரைக் கவர கார்ட்டூன் பரப்புரையை பயன்படுத்துவதில் பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்டுகிறது. ஸ்மார்ட்ஃபோன்கள் வியாபித்திருப்பதால் அதில் பரப்புரை கார்ட்டூன்களை அனுப்பி வாக்கு சேகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
2014ல் வாட்ஸ்அப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை 30 லட்சமாக இருந்த நிலையில், இப்போது 20 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக் 90 லட்சத்தில் இருந்து 26 கோடியாக உயர்ந்திருக்கிறது. இவற்றைப் பின்தொடர வசதியாக இருக்கும் ஸ்மார்ட்ஃபோன் எண்ணிக்கை 2014ல் 16 கோடியாக இருந்த நிலையில், 2019ல் 42 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதனால், மக்களவைத் தேர்தல் பரப்புரையில் சமூக வலைத்தளங்களும் ஸ்மார்ட்ஃபோனும் பெரும் பங்குவகிக்கின்றன.