யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தனது பெருமான்மையை இழந்ததால் ஆட்சி கவிழ்ந்துள்ளது. சபாநாயகர் சிவக்கொழுந்து காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்ததுதான் இதற்கு காரணம். அதோடு கூட்டணி கட்சியான திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரும் ராஜினாமா செய்தது அரசுக்கு பின்னடைவாக அமைந்தது.
தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏக்களின் அரசியல் பின்னணி என்ன? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.
நமச்சிவாயம் - முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர்
புதுச்சேரி பிரதேச காங்கிரஸின் சீனியர் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் நமச்சிவாயம். காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி பிரதேச தலைவராகவும் இருந்தவர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 2001 தேர்தலிலும், காங்கிரஸ் கட்சி சார்பில் 2006, 2011 மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியவர்.
2016 தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் சொல்லப்பட்டதாக சொல்கின்றனர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள். 2016-இல் காங்கிரஸ் ஆட்சியை வென்றதும் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வராக அறிவிக்கப்பட்டார். அதனால் அப்போதிலிருந்தே நமச்சிவாயம் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும், காங்கிரஸ் மீது கொண்ட விசுவாசத்தினால் தனது பதவியை அவர் தொடர்ந்துள்ளார். அந்தச் சூழலில்தான் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். வரும் 2021 தேர்தலை நமச்சிவாயம் பாஜக வேட்பாளராக சந்திப்பார் என தெரிகிறது.
மல்லாடி கிருஷ்ணாராவ் - முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர்
56 வயதான மல்லாடி கிருஷ்ணாராவ் கடந்த 1996 தேர்தல் முதல் 2016 தேர்தல் வரை புதுச்சேரி பிராந்தியமான யானம் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் போட்டியிட்டு வென்றுள்ளார். ஆரம்ப நாட்களில் சுயேட்சையாக போட்டியிட்டு வந்த மல்லாடி கிருஷ்ணாராவ் பின்னாளில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். புதுச்சேரி மாநில காங்கிரஸில் மூத்த தலைவர்களில் ஒருவர். கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்ற இவர் சுகாதார துறை அமைச்சராகவும் செயலாற்றியுள்ளார். இந்நிலையில்தான் முதலில் அமைச்சர் பொறுப்பிலிருந்தும், பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து மல்லாடி ராஜினாமா செய்தார். அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகவும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சுமி நாரயணன் - மூத்த காங்கிரஸ் தலைவர்
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் லட்சுமி நாராயணன். 2016-க்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் அமைச்சராக பணியாற்றியவர். 2001 மற்றும் 2006-இல் காசுக்கடை தொகுதியிலும், 2011 மற்றும் 2016 தேர்தலில் ராஜ்பவன் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2016-இல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது அவருக்கு மந்திரி சபையில் இடம் கொடுக்கப்படாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்காதபோதும் அவர் அதிருப்தி அடைந்ததாக புதுச்சேரி காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஒருநாள் முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்தார் லட்சுமி நாராயணன்.
ஜான்குமார் - முன்னாள் எம்.எல்.ஏ
திமுகவில் அடிப்படை உறுப்பினராக இருந்தபோது பொதுவெளியில் அறிமுகமானவர் ஜான்குமார். உள்ளூரில் தனியார் கேபிள் தொலைக்காட்சியை வைத்துள்ள அவர் அதன் மூலம் சமூக விழிப்புணர்வு வீடியோக்களை பகிர்ந்து வந்தார். தொடர்ந்து கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு 12141 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை வீழ்த்தி சட்டப்பேரவை உறுப்பினரானார்.
நாராயணசாமிக்காக தனது எம்.எல்.ஏ பதவியை தியாகம் செய்தவர். அதற்கு நன்றி கடனாக நாராயணசாமியும் 2019 காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜான்குமாரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தினார். இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஜான்குமார் அண்மையில் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.
தீப்பாய்ந்தான் - முன்னாள் எம்.எல்.ஏ
கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊசுடு தொகுதியில் நின்று போட்டியிட்டு வென்றவர். அதற்கு முன்னதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். தற்போது நமச்சிவாயத்துடன் சேர்ந்து பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார்.
வெங்கடேசன் - முன்னாள் எம்.எல்.ஏ
கடந்த 2019 இடைத்தேர்தலில் திமுக சார்பில் தட்டாஞ்சாவடியில் போட்டியிட்டு வென்றவர். தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- எல்லுச்சாமி கார்த்திக்