ஆம்புலன்ஸ் செல்ல 2 கிமீ ஓடி போக்குவரத்தை சரிசெய்த காவலர்: வைரல் வீடியோ
ஹைதராபாத்தின் நெரிசலான சாலையில் நோயாளியை ஏற்றிக்கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் சாலையை உடனடியாக கடக்க போக்குவரத்து காவலர் ஒருவர் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது,
கடந்த 2008 ஆம் ஆண்டு விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரனின் இதயம் சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்த 9 வயது சிறுமிக்கு பொறுத்தப்பட்டது. தேனாம்பேட்டை அப்போல்லோ மருத்துவமனையில் இருந்து முகப்பேருக்கு 13 நிமிடங்களில் கொண்டுப்போய் சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவரையும் போக்குவரத்து காவலர்களையும் இப்போதும் தமிழக மக்களால் மறக்க முடியாது. அதேபோன்ற, ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்து பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
ஹைதராபாத்தின் போக்குவரத்து நெரிசலான சாலைகளில் ஒன்று அபிட்ஸ் டூ கோட்டி சாலை. இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை உள்ள இந்த சாலையை பீக் ஹவர்ஸில் அவ்வளவு எளிதாக கடந்துவிடவே முடியாது. பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை, மாலை நேரங்களில் பொதுவாகவே நகரப்பகுதிகளில் ட்ராஃபிக் அதிகமாகவே காணப்படும். அலுவலகம் செல்பவர்கள், வீடு நோக்கி வருபவர்கள் என அடைத்துக்கொண்டிருக்கும். அதிலும், சில இடங்கள் இன்னும் நெரிசலைக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் ஒன்றுதான் ஹைதராபாத்தின் அபிட்ஸ் சாலை.
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸ் மருத்துவமனை நோக்கி ஏற்றிச்செல்லும்போது பணியில் இருந்த போக்குவரத்து காவலர் பப்ஜி என்பவர் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள மருத்துவமனையை தனது உயிரைப்பற்றியும் கவலைப்படாமல் ஆம்புலன்ஸுக்கு முன்னால் ஓடி எல்லோரையும் ஒதுங்க வைத்து போக்குவரத்தை சரி செய்துள்ளார்.
அப்படி செய்யும்போது சில நேரங்களில் போக்குவரத்துக் காவலர்களே உயிரிழந்துள்ளனர். அப்படி இருக்கும்போது இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி போக்குவரத்தைச் சரிசெய்த பப்ஜி மகத்தான செயலை பலர் வீடியோ எடுத்துள்ளனர். அதனை, ஹைதராபாத் காவல்துறை அதிகாரிகள் தங்கள் பக்கங்களில் வெளியிட்டதோடு பப்ஜியை நேரில் அழைத்து பூங்கொத்தும் பரிசும் கொடுத்து மரியாதை செய்திருக்கிறார்கள்.

