நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த பெண்... சற்றும் யோசிக்காமல் போலீஸார் செய்த செயல்!
ஹைதராபாத்தில் கர்ப்பிணியை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வாகனம் இல்லாததால் ரோந்து வண்டியில் ஏற்றிச்சென்று காவல்துறை உதவியுள்ளது.
ஹைதராபாத்தில் வன்ஸ்தாலிபுரம் பகுதியில் வசித்துவருபவர் ஸ்ரீனிவாஸ். 32 வயதான இவர் மனைவி ஸ்ருதி 8 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். அவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென குறை மாதத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இரவுநேரத்தில் 108 ஆம்புலன்ஸை அழைத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் வர தாமதமாகும் என்று கூறிய நிலையில், வாடகைக்கார் கிடைக்குமா எனத் தேடியிருக்கிறனர்.
எந்த போக்குவரத்து வசதியும் கிடைக்காததால் திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சீனிவாஸ் ரச்சகொண்டா காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு உதவி கேட்டிருக்கிறார். வெறும் ஐந்தே நிமிடத்தில் ரோந்து வண்டியை அனுப்பிய போலீஸார் ஸ்ருதியை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்திருக்கின்றனர்.
சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்குக் கொண்டுவந்ததால்தான் ஸ்ருதியை காப்பாற்ற முடிந்ததாக மருத்துவர்கள் கூறியிருக்கிறனர். குறை மாதத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டதால் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை எனவும், ஆனால் சரியான நேரத்தில் காவல்துறை உதவியதால்தான் தனது மகளைக் காப்பாற்ற முடிந்ததாகவும் ஸ்ருதியின் தாயார் நன்றி தெரிவித்துள்ளார்.