ஏர்போர்ட்டில் அதிகாரியை அறைந்த பெண் பயணி: மன்னிப்பு கேட்டதால் சமரசம்!
டெல்லி விமான நிலையத்தில் ஏர்-இந்தியா பெண் அதிகாரியும் பெண் பயணியும் மாறி மாறி அறைந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல வேண்டிய பெண் பயணி ஒருவர் லேட்டாக வந்தார். அந்த பயணியின் கணவர் அரசு அதிகாரி என்று கூறப்படுகிறது. போர்டிங் பாஸ் வழங்க முடியாது என விமான நிறுவத்தினர் கூறினார். வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த பயணி, விமானத்தின் பெண் அதிகாரியை சந்தித்தார். ‘நீங்கள் 75 நிமிடங்களுக்கு முன்னதாக வந்திருக்க வேண்டும்’ என அதிகாரி கூறினார். இதையடுத்து இருவரும் வார்த்தையால் மோதிக்கொண்டனர். இதையடுத்து பெண் பயணி அந்த அதிகாரியின் கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு அதிகாரியும் பயணியை தாக்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தங்கள் செயலுக்கு மன்னிப்புக் கேட்டதால் பிரச்னை முடித்து வைக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.