காவல்துறையினரின் பணிச்சுமையை குறிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ !
காவல்துறை அதிகாரி ஒருவர் வேலைக்கு செல்லும் போது அவரது குழந்தை அதை தடுப்பது போல காட்சிகள் கொண்ட வீடியோ கண்களை கலங்கவைக்கின்றன.
காவல்துறையினர் எப்போதும் அயராது தங்கள் பணியில் ஈடுபடுபவர்கள். அவர்கள் கால நேரம் பார்காமல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவர்கள் பண்டிகை காலங்களிலும் தங்களின் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் பணியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஓடிசாவை சேர்ந்த காவல்துறை அதிகாரி அருண் போத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், “காவல்துறை பணியிலிருக்கும் கஷ்டம் இதுதான். ஏனென்றால் அதிக நேரம் பணியில் இருப்பதால் காவலர்கள் அனைவரும் இந்த நிலையை சந்திப்பார்கள்” என கூறி வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் காவல்துறை காவலர் ஒருவர் பணிக்கு கிளம்பும் போது அவரது குழந்தை அவரை வேலைக்கு செல்லாமல் தடுக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த குழந்தையை சமாளிக்கும் வகையில் காவலர் எடுக்கும் முயற்சிகளும் வீடியோவில் உள்ளன. எனினும் அந்தக் குழந்தை தனது தந்தையை பணிக்கு செல்லாவிடாமல் கால்களை பிடித்து கொண்டுள்ள காட்சிகள் காண்பவர் கண்களில் கண்ணீர் வர வைக்கும் அளவிற்கு உள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.