செம்மரக் கடத்தலுக்கு துணைபோகும் போலீஸ்: ஐஜி காந்தாராவ் குற்றச்சாட்டு

செம்மரக் கடத்தலுக்கு துணைபோகும் போலீஸ்: ஐஜி காந்தாராவ் குற்றச்சாட்டு

செம்மரக் கடத்தலுக்கு துணைபோகும் போலீஸ்: ஐஜி காந்தாராவ் குற்றச்சாட்டு
Published on

செம்மரக் கடத்தலுக்கு சில போலீசாரே துணைபோவதாக ஆந்திர செம்மரக்கடத்தல் அதிரடிப்படை ஐஜி காந்தராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பதியில் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படைக்கு காவல்துறை, வனத்துறை மற்றும் இதர அரசு துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று செம்மரக்கடத்தல் அதிரடிப்படை ஐஜி குற்றம் சாட்டியுள்ளார். அதேநேரத்தில் ஏற்கனவே பிடித்த கட்டைகளை அதிரடிப்படை கணக்கு காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

2014 நவம்பர் மாதத்தில், திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிரடிப்படை ஏற்படுத்தப்பட்டது. இந்த அதிரடிப்படை 2015 ஏப்ரல் மாதம் செம்மரம் வெட்டவந்ததாக கூறி 20 தமிழர்களை என்கவுண்ட்டரில் கொ‌ன்றது. இந்நிலையில் அதிரடிப்படை டிஐஜி காந்தாராவ், ஐஜியாக பதவி உயர்வு பெற்றார். சர்வதேச அளவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட கங்கிரெட்டி கைது செய்யப்பட்டார். இந்த அதிரடிப்படைக்கான படிகள் குறைக்கப்பட்ட நிலையில் அதிரடிப்படையினர் ரோந்து செல்வதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. முன்னரே பிடிபட்ட செம்மரக்கட்டைகளை கொஞ்‌சம் கொஞ்சமாக காட்டி, கூலித்தொழிலாளர்களை மட்டுமே அவ்வப்போது கைது செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிரடிப்படையினருக்கு,‌ காவல், வனத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள ஐஜி காந்தராவ், செம்மரக்கடத்தலுக்கு சில போலீசாரே துணைபோவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், சித்தூர், கடப்பா, நெல்லூர், திருப்பதி எஸ்பி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள செம்மரக்கடத்தல் சிறப்புக்குழுவினர், செம்மரக்கடத்தலில் ஈடுப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்வது, தமிழகம், கர்நாடக பகுதிகளில் உள்ள கிடங்குகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்துவருகிறார்கள். ஒரே நோக்கத்தில் செயல்படும் இருவேறு படைகளின் மோதல், செம்மரக்கடத்தல் முக்கிய புள்ளிகளுக்கு சாதகமாவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com