வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவ ஆட்டோ ஓட்டுநராக மாறிய போலீஸ்.. குவியும் பாராட்டு
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் சீல் வைக்கப்பட்ட பகுதிக்கு அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ், அங்கு நின்றிருந்த ஆட்டோவில் ஏற்றி தானே மருத்துவமனை வரை ஓட்டிச்சென்று பிரசவத்திற்கு சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய் சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகள், முன்னெச்சரிக்கை பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமல்லாமல் வீதியில் இரவு பகலாக காவலர்களும் பணியாற்றி வருகின்றனர். இத்தகையோரின் பணிகள் பாராட்டுதலுக்கு உரியவை.
அந்தவகையில் புதுச்சேரியை அடுத்த கோட்டக்குப்பம் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அப்பகுதி முதல் முத்தியால்பேட் பகுதிவரை சீல் வைக்கப்பட்டு பொது மக்கள் யாரும் வெளியே வராதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் முத்தியால்பேட் பகுதியில் இரவு நேரத்தில் கருணாகரன் மற்றும் அருண்ஜோதி என்ற இரு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத நிசப்தமான இருள் சூழ்ந்த இரவு நேரத்தில் பிரசவ வலியால் துடித்தபடி நிறைமாத கர்ப்பிணி பெண்ணை அழைத்துக் கொண்டு அவரது தாயார் மெல்ல மெல்ல நடந்து வந்தார். அவர்களிடம் காவலர்கள் விசாரித்தபோது தனது மகள் குழந்தை பிறக்கும் தருவாயில் பிரசவ வலியால் துடிப்பதால் அவளை மருத்துவமனை கொண்டு செல்ல உதவுங்கள் என அந்த பெண்மணி போலீசாரிடம் கேட்டார்.
ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி வருவதற்குள் நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த காவலர் கருணாகரன் வேறு எதாவது வாகனத்தில் கொண்டு செல்ல வேண்டும் என திட்டமிட்டார். அப்போது ஒரு வீட்டு வாசலில் ஆட்டோ நின்றிருந்தது. அந்த வீட்டில் சென்று ஆட்டோ ஓட்டுனரை அழைத்தார் காவலர் கருணாகரன்.
ஆனால் தனக்கு ஆட்டோ ஓட்டத் தொரியாது எனவும் நான் வாடகைக்குத்தான விடுகின்றேன் எனவும் வீட்டுக்காரர் கூற, ஆட்டோவை தானே இயக்கு முன் வந்தார் கருணாகரன். இதையடுத்து கர்ப்பிணி பெண்ணையும் அவரது தாயாரையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும்போதே கர்ப்பிணி பெண்ணுக்கு பனிக்குடம் உடைந்தது அலறத்தொடங்கினார்.
இதுவரை ஆட்டோ ஓட்டி பழக்கமில்லாத காவலர் கருணாகரன் நிதானமாகாவும் அதேநேரத்தில் வேகமாகவும் வந்து கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தார். சற்று நேரம் பதற்றத்துடன் காத்திருந்த காவலர் கருணாகரனிடம் கர்ப்பிணி பெண்ணின் தாயார் வந்து தம்பி மகளுக்கு ஆண்குழந்தை சுகமாக பிறந்து விட்டது, மிகவும் நன்றி ஐயா எனக் கூறினார். அந்த ஆனந்தத்தோடு இரு உயிர்களை காப்பாற்றிய நிம்மதியோடு அந்த ஆட்டோவை ஓட்டி வந்து உரியவரிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் காவல் பணிக்கு திரும்பினார் கருணாகரன்.
கொரோனா நோய் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க பணியில் இருந்த காவலர்களின் துரிதமான துணிச்சலான செயல், உலகிற்கு வந்த ஒரு புதிய உயிரை தக்க நேரத்தில் காப்பாற்ற உதவியுள்ளது.