2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்.. வழக்குப்பதிவு செய்து காவல்துறை அதிரடி!

பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியர் ஒருவர் 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2,000 rs, petrol bunk
2,000 rs, petrol bunktwitter page

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19ஆம் தேதி அறிவித்தது. அதேநேரத்தில், “புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லும் எனவும், வரும் 23ஆம் தேதி (நாளை) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை தினமும் ரூ.20,000 மதிப்பு அளவுக்கு வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து மக்கள், தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். அதேநேரத்தில், 2,000 ரூபாய் நோட்டுகள் வரும் செப்டம்பர் 30 வரை செல்லும் என அரசு அறிவித்தும் வியாபாரிகள் அந்நோட்டை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். அதிலும் வெறும் 200 - 300 ரூபாய்க்கு மட்டும் பொருட்கள் வாங்குபவர்களிடம் எல்லாம் 2,000 ரூபாய் மட்டும் பெறப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. இதேநிலைதான் பெட்ரோல் பங்குகளிலும் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது.

இதனால், பல நிறுவனங்களில், கடைகளில் தற்போது சில்லறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த சில்லரை நெருக்கடி வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்பாகவும் சிலர் பயன்படுத்தியுள்ளனர். அந்த வகையில், டெல்லியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்று, ”2000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தால் அதைப் பெற்றுக்கொண்டு 2,100 ரூபாய்க்கு இறைச்சி வழங்கப்படும்” என்று ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், அங்கு வியாபாரம் களைகட்டி வருகிறதாம். இது ஒருபுறமிக்க.. மறுபுறம், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில், ரூ.2,000 அளவுக்கு எரிபொருள் நிரப்பினால், 2,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால், கடந்த சில நாள்களாக 2,000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் புழங்கப்படுவதாக பஞ்சாப் பெட்ரோலிய பொருள்கள் விநியோகஸ்தர்கள் கழகம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், அங்குள்ள பெட்ரோல் பங்க்குக்குச் சென்று தனது ஸ்கூட்டரில் பெட்ரோலை நிரப்பியுள்ளார். பின்னர் அந்த நபர் பெட்ரோல் நிரப்பியதற்காக, ரூ.2,000 நோட்டைக் கொடுத்துள்ளார். ஆனால், பெட்ரோல் பம்ப் ஊழியரோ அந்த ரூ.2,000 நோட்டை வாங்க மறுத்துள்ளார். மேலும், அந்த நபரிடம் வேறு பணம் இல்லாததால் அவருடைய ஸ்கூட்டரில் இருந்து பெட்ரோலை திரும்ப எடுத்த நிகழ்வுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

2,000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறும் அரசின் அதிரடி முடிவால், 1 அல்லது 2 நோட்டுகளை வைத்திருக்கும் சாமான்ய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்ற சம்பவம் டெல்லியிலும் நிகழ்ந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒருவர், தெற்கு விரிவாக்கம் பகுதி-1இல் உள்ள பெட்ரோல் பங்க்கில் தன்னுடைய இருசக்கர வாகனத்துக்கு ரூ.400க்கு எரிபொருள் நிரப்பியுள்ளார். அதற்காக தன்னிடமிருந்த ரூ.2000 நோட்டை எடுத்துக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த பம்ப் ஊழியரோ 2,000 நோட்டை வாங்க மறுத்துள்ளார். இதையடுத்து அந்த நபர்மீது, பெட்ரோல் நிரப்பியவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக கோட்லா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையும் தெரிவித்துள்ளது. புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com