டெல்லி | சோனம் வாங்சுக் மனைவி மீது காவல்துறை தாக்குதல் - CJP குற்றச்சாட்டு
நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று கரப்பான் பூச்சி கட்சியினர் கடந்த 1 மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். எனினும் மத்திய அரசு இந்தப் போராட்டத்திற்கு செவி சாய்க்கவில்லை. இந்தசூழலில் தான், நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று (ஜூலை 20) தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்படும் என கரப்பான் பூச்சி கட்சி தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், நேற்றைய முன் தினம் வலுக்கட்டாயமாக போராட்ட களத்தில் இருந்து அகற்றப்பட்ட சோனம் வாங்சுக் டெல்லி காவல்துறையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களையும் அப்புறப்படுத்தியது காவல்துறை. எனினும், திட்டமிட்டபடி நாடாளுமன்ற பேரணி நடத்தப்படும் என சிஜேபி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆதரவாளர்கள் முயற்சி செய்ததனர். அப்போது, பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முற்பட்டனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. நுழைவாயில்கள் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நுழைவாயிலுக்கு வெளியே பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து, போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. அப்போது 3 நிபந்தனைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கிடையில் தான், நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியின் போது, காவல்துறையினர் தீவிர அடக்குமுறையைக் கையாண்டு வருவதாகவும், குறிப்பாக, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி ஆங்மோவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, டெல்லி காவல்துறை அவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது எனவும் CJP செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பேரணியில் பங்கேற்ற 12 வயது சிறுமி ஒருவரது மண்டை உடைந்ததாகவும், மேலும் 40-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் CJP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வன்முறையோ அல்லது தேவையற்ற கைதுகளோ எதுவும் நடைபெறவில்லை என்றும், சட்டம் ஒழுங்கு தொழில்முறையோடு கையாளப்பட்டு வருவதாகவும் டெல்லி காவல்துறை அறிக்கை வெளியிட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

