வன்முறையை தூண்டும் விதத்தில் டிக் டாக் வீடியோ: ஒருவர் கைது!
காஷ்மீரில் வன்முறையை தூண்டும் விதத்தில் டிக் டாக்கில் வீடியோ பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்
வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்று ‘டிக் டாக்’ செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் என்று மட்டும் இல்லாமல் வயது வித்தியாசங்களை தாண்டி இந்தச் செயலிகளுக்கான வாடிக்கையாளர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். பல்வேறு சர்ச்சைகளை டிக் டாக் சந்தித்தது. இதனையடுத்து டிக் டாக் செயலியை தடை செய்யகோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு பின் டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் தடையை நீக்கியது. இதனையடுத்து மீண்டும் டிக் டாக் களம் இறங்கியது.
அவ்வப்போது டிக் டாக் மூலம் வன்முறையை தூண்டும் விதத்திலும் வீடியோக்கள் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் காஷ்மீர் பந்திபோரா சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வன்முறையை தூண்டும் விதத்தில் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் தெரிவித்த போலீசார், பந்திபோரா விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட குழுவினரை குறிப்பிட்டு பேசப்பட்ட வீடியோ ஒன்று டிக் டாக்கில் பரவியது. இது வன்முறையை தூண்டும் விதத்திலும், பதற்றத்தை அதிகரிக்கும் விதத்திலும் இருந்ததால் இது குறித்து நடவடிக்கை எடுத்தோம். இது குறித்து வீடியோ வெளியிட்ட ஒருவரை கைது செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் பரவும் எல்லா தகவல்களையும் மக்கள் நம்பி எதிர்வினையாற்றக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்