போலிஸும் ரவுடிகளும் இணைந்து நல்ல காரியம் செய்யமுடியாமா என்றால் முடியும் என நிரூபித்து உள்ளனர் பெங்களூர் போலிஸும் அந்த பகுதி ரவுடிகளும்.
பெங்களூர் புறநகரான அனேகல் பகுதியில் உள்ள முக்கியமான ஏரிகளில் ஒன்று ஹரப்பனகல்லி ஏரி. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் முழுமையாக புதர்கள் மண்டி பாழடைந்து காணப்பட்டது. இதனை ஏன் மீட்டுக் கொண்டு வரக் கூடாது என யோசித்தனர் காவல்துறையினர். பெங்களூர் புறநகர் கண்காணிப்பாளர் எஸ்.கே.உமேஷ் தலைமையில் அந்த ஏரியை பார்வையிட்டது காவல்துறை. அடுத்த நாள் 125 காவலர்களும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 100 ரவுடிகளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டது குழு. காலையில் ஆரம்பித்த தூர்வாரும் பணி , அடுத்த 8 மணி நேரத்தில் முடிவடைந்தது. ஏரியில் இருந்த அனைத்து செடிகள், புதர்கள் அகற்றப்பட்டது.
இந்த தூர்வாரும் பணிக்காக ஒன்பது படகுகள், டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டது. தூர்வாரி அள்ளப்பட்ட குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு குப்பை சேமிப்பு கிடங்குகளில் கொட்டப்பட்டது. ரவுடிகளையும் , வழக்குகளில் சிக்கியவர்களையும் வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்பதற்கு இந்தப் பணி ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது. அதோடு ஏரியை பராமரிக்கும் பணியையும் ரவுடிகளிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். மேலும் குளத்தில் மீன் வளர்க்கும் பணியை மற்றொரு ரவுடி மேற்கொள்வதாக தெரிவித்தார். இதனையடுத்து அந்த குளத்துக்கு ‘போலீஸ் குளம்’ என பெயர் வைக்கப்பட்டது.