விற்பனைப் பட்டியலில் விஷக்காய்? உணவுப் பொருள் விற்க அதிரடி தடை! சிக்கலில் Amazon, swiggy!
கர்நாடகாவில் ஆன்லைன் உணவு விற்பனை தளங்கள் மூலம் தத்தூரா (ஊமத்தை) பழங்கள், விதைகள் மனிதர்கள் சாப்பிடும் பொருளாக பட்டியலிடப்பட்டதாக புகார் எழுந்தது. விசாரணையில் அவை விஷத்தன்மை கொண்டவை என உறுதி செய்யப்பட்டதால், அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக் பாஸ்கெட் நிறுவனங்களின் உணவு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அனைத்து தொடர்புடைய பட்டியல்களையும் நீக்க உத்தரவு பிறந்தது.
தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் பரபரப்பான உலகத்தில், மக்கள் பெரும்பாலும் ஆன்லைன் டெலிவரியையே நம்பியுள்ளனர். உணவு முதல் மருந்து வரை பெரும்பாலான பொருட்கள் ஆன்லைனில் தான் ஆர்டர் செய்யப்படுகின்றன. இந்நிலையில், பிரபல ஆன்லைன் வணிகத் தளங்கள் விஷத்தன்மை கொண்ட பொருட்களை விற்பனைப் பட்டியலில் வைத்துள்ளதாகக் கூறி, கர்நாடக அரசு அவற்றிற்கு வழங்கியிருந்த உணவு விற்பனைக்கான உரிமத்தை ரத்து செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஆன்லைன் மூலம் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் தளங்களில், தத்தூரா எனப்படும் ஊமத்தை எனப்படும் விஷத்தன்மை கொண்ட செடியின் பழங்கள் மற்றும் விதைகள் மனிதர்கள் சாப்பிடுவதற்கான பொருட்களாகப் பட்டியலிடப்பட்டிருந்ததாகப் புகார்கள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பல்வேறு ஆன்லைன் தளங்களில் தத்தூரா எனப்படும் ஊமத்தைப் பழங்கள் மற்றும் விதைகள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், சில பொருட்களின் பாக்கெட்டுகளில் உணவுப் பொருட்களுக்கான FSSAI உரிமம் மற்றும் பதிவு எண்களும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. சில பொருட்கள் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும், ஆன்லைன் தளங்கள் மூலம் விற்பனை அல்லது விநியோகத்திற்காக வழங்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. தத்தூரா எனப்படும் ஊமத்தை விஷத்தன்மை கொண்ட தாவரமாகும். இதன் பழங்கள் மற்றும் விதைகளை முறையாகச் சுத்திகரிக்காமல் உட்கொள்வது கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், சில நேரங்களில் கோமா மற்றும் உயிரிழப்பு வரை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால், தத்தூரா பழம் மற்றும் விதைகளை உணவுப் பொருளாகச் சேமிப்பது, விற்பனை செய்வது அல்லது விநியோகிப்பது அனுமதிக்க முடியாதது என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, Amazon, Swiggy Instamart மற்றும் BigBasket ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த உணவு உரிமங்களை, கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அடுத்த உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக உரிய விளக்கமளிக்கவும், ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகளை உணவாகவோ அல்லது மனிதர்கள் உட்கொள்வதற்கான பொருளாகவோ விளம்பரப்படுத்தும் அனைத்து ஆன்லைன் பட்டியல்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அவற்றின் விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் விஷத்தன்மை கொண்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர

