புகாரை வாபஸ் பெற்ற பெண்; பிரிஜ் பூஷன் சிங் மீதான போக்சோ பாலியல் வழக்கு முடித்துவைப்பு!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் அடங்கிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் குழு கடந்த 2023ஆண்டு தொடக்கம் முதல் டெல்லியில் போராட்டம் மேற்கொண்டது. இது உலக அளவில் கவனம் பெற்றது.
இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் வேண்டும் என மல்யுத்த வீரர்கள், வீராங்கணைகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் டெல்லி போலீசார், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப் பதிந்தனர். புகார்தாரர்களில் ஒருவர் மைனர் பெண் என்பதால் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி காவல்துறை, போக்சோ வழக்கில் மைனர் பெண் மற்றும் அவரது தந்தை அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் வழக்கை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தைக் கோரியது. பின்னர் நீதிமன்றம், காவல்துறை அறிக்கைக்குப் பதிலளிக்கக் கோரி, மைனர் பெண்ணுக்கும் அவரது தந்தைக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
ஆகஸ்ட் 2023இல் நீதிமன்றத்தில் ஆஜரான அவர்கள் காவல்துறை அறிக்கைக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. தவிர, அவர்கள் வழக்கையும் வாபஸ் பெற்றனர். இதனால் பிரிஜ் பூஷனுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கைத் தள்ளுபடி செய்து நேற்று டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரத்திற்கு இடையே, சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.