போக்சோ சட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

போக்சோ சட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

போக்சோ சட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
Published on


இந்தியாவில் 99.1% பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் தவிர்க்கப்படுகின்றன என்கிறது 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட லைவ்மின்ட் இணையதள ஆய்வு. ஆனால் காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் நடைபெற்ற சிறுமி பாலியல் வன்முறை மற்றும் உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடந்த மாணவியின் பாலியில் வன்முறை குற்றங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

இந்த இரு சம்பவங்களுக்கு முன்பு 2012 ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நடைபெற்ற நிர்பையா பாலியல் வன்முறை சம்பவம்தான் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. பெண்கள், மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து பெரிய அளவில் விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. பெரும்பாலான மக்கள் இந்தப் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வீதிகளில் திரண்டனர். ஆகவே அரசும் சட்டரீதியான மாற்றங்களை கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக கிடைத்ததுதான் இந்த ‘போக்சோ’சட்டம். 

இந்தச் சட்டம் வந்து பிறகும் பல மாநிலங்களில் குழந்தைளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதற்கு பிரதான காரணம், இந்தச் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இன்னும் வளரவில்லை. இந்தச் சட்டம் எந்தளவுக்கு பாதுகாப்பானது? இதிலுள்ள ஷரத்துக்கள் என்ன? என்பதை விளக்குவதே இந்தப் பதிவு நோக்கம்.  

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்றால் என்ன? 

  * பலவந்தமான பாலியல் தாக்குதல் செய்வது (penetrative sexual Assault).
  * எல்லைமீறிய பலவந்தமான பாலியல் தாக்குதல் செய்வது (aggravated penetrative sexual assault)
  * பாலியல் ரீதியான தாக்குதல் (Sexual Assault)
  * எல்லைமீறிய பாலியல் தாக்குதல் (Aggravated Sexual Assault)
  * பாலியல் தொந்தரவு (Sexual Harassment)
  * குழந்தைகளை வைத்து ஆபாச படங்கள் எடுத்தல்
ஆகிய ஆறு வகை பாலியல் குற்றங்கள் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை எவ்வாறு பதிவு செய்யவேண்டும்?

பாலியல் குற்றத்தை அந்தக் குழந்தையோ அல்லது அது பற்றி விவரம் தெரிந்தவரோ புகார் அளிக்க வேண்டும். அவர்கள் இதுபற்றி சிறப்பு குழந்தை பிரிவு காவல்துறை அல்லது உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும். இந்தப் புகாரை காவல்துறையினர் பதிவு செய்து வைக்கவேண்டும். மேலும் அந்தக் குழந்தையே புகார் தெரிவித்தால் அந்தக் குழந்தைக்குப் புரியும் மொழியில் பதிவு செய்த புகாரை வாசித்துகாட்ட வேண்டும்.

அதன்பின் அந்தக் காவல்துறை அதிகாரி அந்தக் குழந்தைக்கு மருத்துவ உதவியோ அல்லது பாதுகாப்போ தேவைப்பட்டால் அதை அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு பிறகு, அந்தப் புகாரை 24 மணி நேரத்திற்குள் குழந்தைகள் நல குழுவிடம் தெரிவிக்க வேண்டும். அதேபோல, இந்தக் குற்றத்திற்கான சிறப்பு நீதிமன்றம் அல்லது இதற்காக நியமிக்கப்பட்ட நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

சரி, இந்தக் குற்றச்சம்பவத்தை பத்திரிகைகள் எவ்வாறு கையாள வேண்டும்? 
 
இந்தக் குற்றச்சாட்டினை பத்திரிகை குறிப்பிட்டு எழுதும்போது அந்தக் குழந்தையின் பெயர், முகவரி, பள்ளி, புகைப்படம் மற்றும் அருகாமையிலுள்ளவர்களின் விவரம் போன்றவற்றை தெரிவிக்க கூடாது. அவ்வாறு விவரங்களை தெரிவித்தால் 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

இந்தப் புகாரில் குழந்தையின் வாக்குமூலத்தை பதிவு செய்வது எப்படி?

குழந்தையின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது அந்தக் குழந்தைக்கான உகந்த இடத்தில் பதிவு செய்யபடவேண்டும். மேலும் இதற்கு சப் இன்ஸ்பெக்டர் அல்லது அதற்குமேல் பொறுப்பிலுள்ள பெண் காவல் அதிகாரி சென்று குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும். அந்தப் பெண் காவல் அதிகாரி வாக்குமூலம் பெற காவலருக்கான சீருடை அணிந்து செல்லக்கூடாது. அத்துடன் வாய்ப்பு இருந்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் வாக்குமூலத்தை ஒலிப்பதிவாகவோ அல்லது காட்சியாகவோ பதிவு செய்யலாம்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான குழந்தையை மருத்துவ பரிசோதனை செய்வது எப்படி?

பாதிக்கப்பட்ட குழந்தையின் மருத்துவ பரிசோதனை குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 164A படி செய்யவேண்டும். மேலும், பாத்திக்கப்பட்ட குழந்தை பெண் என்றால் பெண் மருத்துவர் பரிசோதனை செய்ய வேண்டும். 

அதேபோல, மருத்துவ பரிசோதனையின் போது குழந்தையின் பெற்றோர் அல்லது குழந்தைக்கு நம்பகமானவர் உடன் இருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனையின் போது இவர்களால் இருக்க இயலவில்லை என்றால் நியமிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவர் உடன் இருக்கவேண்டும். 

இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் எவ்வாறு விசாரிக்க வேண்டும்?

சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கின் மொத்த விசாரணையையும் கேமராவில் பதிவு செய்யவேண்டும். அதேபோல, சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரிக்கும் போது குழந்தைக்கு உகந்த சுழலை உருவாக்க வேண்டும். மேலும், சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை சம்பவம் பதிவு செய்யப்பட்ட தினத்தில் இருந்து ஓராண்டிற்குள் விரைந்து முடிக்க வேண்டும். 

  
  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com