நிரவ் மோடியை பிடிக்க தீவிர நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்
நிரவ் மோடி நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும், அவரை பிடிப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, சமீபத்தில் பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பிய அறிக்கையில் ரூ.11,500 கோடி முறைகேடு நடந்ததாக தெரிவித்துள்ளது. இந்த மோசடி வழக்கில் பிரபல நகைக் கடை அதிபர் நிரவ் மோடிக்கு எதிராக இரு புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகள் கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே மோசடி செய்ததாக தேடப்படும் நிரவ் மோடி குடும்பத்துடன், வெளிநாடு தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நிரவ் மோடி நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும், அவரை பிடிப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோசடி செய்பவர்களை தப்பிக்க மத்திய அரசு உதவி செய்யவில்லை என்றும் மாறாக அவர்களை பிடிக்கவே முயற்சிப்பதாகவும் கூறினார்.
2013ம் ஆண்டு கீதாஞ்சலி நிறுவன பங்குகள் மும்பை பங்குச் சந்தையிலிருந்து 6 மாத காலம் நீக்கப்பட்டபோது அந்த நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டதாகவும் அவர் கூறினார். ஃபயர் ஸ்டார் டைமண்ட் இண்டர்நேஷனல் என்ற நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனம் அத்வைத் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், இந்த அத்வைத் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வியின் மனைவி அனிதா சிங்வி ஒரு இயக்குநர் என்றும் கூறினார்.