ஜல்லிக்கட்டு தொடர்பான கடிதத்தின் மீது நடவடிக்கை...பிரதமர் அலுவலகம் தகவல்
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தை, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்திருப்பதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள குறிப்பில், ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்ததாக கூறியுள்ளது. இந்த கடிதத்தை ஜல்லிக்கட்டு விவகாரங்களை கையாளும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு அனுப்பி வைத்திருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திற்கும், தமிழக முதலமைச்சர் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரியிருப்பதால், அவரது கடிதம், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கிக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக முதலமைச்சர் கடிதத்தின் மீதான தங்கள் கருத்துகளை உடனடியாக தெரிவிக்குமாறு, மத்திய சுற்றுச்சூழல்துறை, மத்திய சட்டத்துறை அமைச்சகங்களையும், தலைமை வழக்கறிஞரையும், கேட்டுக்கொண்டிருப்பதாகவும், பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.