விவசாயிகளுக்கு 2 ஆயிரம் திட்டத்தை கோரக்பூரில் தொடங்குகிறார் மோடி
சிறு, குறு விவசாயிகளுக்கான ‘பிரதம மந்திரி கிஷான் சம்மான் நீதி’ திட்டத்தை வரும் 24ஆம் தேதி பிரதமர் மோடி கோரக்பூரில் தொடங்கி வைக்கவுள்ளார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு பல முக்கிய அறிவிப்புகளை அளித்திருந்தது. அதில் சிறு, குறு விவசாயிகள் பயன்படும் வகையில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. அது ‘பிரதம மந்திரி கிஷான் சம்மான் நீதி’ என்ற திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு 2 ஹெக்டர் நிலமுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 6 ஆயிரத்தை மூன்று தவணைகளாக வழங்கும். அதன்படி ரூ 2000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ 75000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்திற்கான பயனாளிகள் 1 பிப்ரவரி 2019 வரையுள்ள நில ஆவணங்களை வைத்து கண்டறியப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூரில் நடைபெறும் கூட்டத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் ராதா மோகன் சிங், இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக ஒளிப்பரப்படும் என்று தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் முதல் தவணையில் சுமார் 2 கோடி விவசாயிகள் பயனடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் விவசாயிகள் இன்னும் சேர்க்கப்பட்டுவருதால் இந்தப் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் இந்த உதவிதொகையை பெற அவர்களின் பெயரில் ஒரு வங்கி கணக்கு ஒன்றை வைத்திருந்தால் மட்டும் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.