
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை ‘டியூப் லைட்’ என்று பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் சுமார் ஒன்றரை மணி நேரம் பிரதமர் மோடி பேசினார். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம், எந்த மத நம்பிக்கை கொண்டவரையும் பாதிக்காது என்றார். தாங்கள் மக்களை இந்தியர்களாக பார்ப்பதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களை அவரவர் மத நம்பிக்கையின் அடிப்படையில் அணுகுவதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.
அரசியல் சாசனத்தை பற்றி அடிக்கடி பேசும் காங்கிரஸ் ஒரு காலத்தில் அதை தூக்கி எறிந்து எமர்ஜென்சியை கொண்டு வந்த கட்சி என மோடி குறிப்பிட்டார். காங்கிரசார் மீண்டும் மீண்டும் அரசியல் சாசனத்தை பற்றி படிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் தவறுக்கு பரிகாரம் தேடிக்கொண்டது போலாகும் எனவும் மோடி குறிப்பிட்டார்.
தமது ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்ட பிரதமர் மோடி, கடந்த 5 ஆண்டுகளில் அரசின் செயல்களை பார்த்த மக்கள், தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறுக்கிட்டு ஏதோ பேசினார். இதற்குப் பதிலளித்த பிரதமர், தாம் 40 நிமிடங்களாக பேசி வருவதாகவும், ஆனால் தற்போதுதான் எதிர்வரிசைக்கு மின்சாரம் பாய்ந்துள்ளது என்றார். மேலும், சில டியூப் லைட்கள் இப்படித்தான் வேலை செய்கின்றன என ராகுலை மறைமுகமாக மோடி விமர்சித்தார்.