பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு விவரம்.. குழப்பும் பதில்கள்..!

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு விவரம்.. குழப்பும் பதில்கள்..!
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு விவரம்.. குழப்பும் பதில்கள்..!

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு 517 கோடி ரூபாய் செலவானது என்று நேற்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு முன்பே 2018ல் பதிலளித்தபோது 2021 கோடி செலவானது என்றும், இந்த மார்ச் மாதம் பதிலளித்தபோது  446.52 கோடி செலவானது என்று இருவேறுவிதமான செலவு கணக்குகளை வழங்கியுள்ளது வெளியுறவுத்துறை.

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மற்றும் அதன் செலவுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அவ்வப்போது கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. பவுசியா கான், 2015 முதல் பிரதமர் நரேந்திர மோடி எத்தனை நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார், அந்த வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் என்ன என்பது பற்றி கேள்வி எழுப்பினார். “பிரதமர் நரேந்திர மோடி 2015 முதல் 58 நாடுகளுக்கு பயணம் செய்ததாக வெளியுறவு அமைச்சகம் நேற்று பதிலளித்தது. இதனால் அரசாங்கத்திற்கு ரூ 517.82 கோடி செலவாகியுள்ளது” என்றும் அமைச்சர் வி முரளிதரன் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

ஆனால் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த ஆண்டு தொடக்கத்தில் மக்களவையில் இதேபோன்ற கேள்விக்கு முரளிதரன், பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கான செலவினங்களுக்காக வேறுபட்ட புள்ளிவிவரத்தை முன்வைத்திருந்தார். மார்ச் மாதம் பாராளுமன்றத்தின் பட்ஜெட் அமர்வின்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு அரசாங்கம் செய்த செலவினங்களை முரளிதரன் விரிவாக வழங்கினார். ஒட்டுமொத்த செலவினங்கள் ரூ. 446.52 கோடி என்றும், 2015-16ல் ரூ 121.85 கோடி, 2016-17ல் ரூ 78.52 கோடி, 2017-18ல் ரூ 99 கோடி, 2018-19ல் ரூ 100.02 கோடி, 2019 ல் ரூ 46.23 கோடி எனவும் தெரிவித்திருந்தார்.

அதன்பிறகு பிரதமர் மோடி இந்த ஆண்டு எந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு வருகைக்கான செலவு 571.82 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது, இது மார்ச் மாதன் அறிவித்த தொகையை விட ரூ 125.30 கோடி அதிகமாகும்.

அதுபோல மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட செலவினங்களுக்கு வெறியுறவுத்துறை வழங்கிய மற்றொரு பதிலும் உள்ளது. இது அமைச்சகத்தின் சமீபத்திய பதிலுக்கு முற்றிலும் மாறாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக 2014 முதல் மொத்தம் ரூபாய் 2021 கோடியை அரசாங்கம் செலவு செய்துள்ளதாக 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில், அப்போதைய வெளியுறவுத்துறை வி.கே.சிங் மாநிலங்களவைக்கு அறிவித்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி அந்த நேரம் வரை 48 வெளிநாட்டு பயணங்களில் 55 நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார். பிரதம அமைச்சர் அதன் பின்னர் மேலும் 11 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். பி.எம் இந்தியா இணையதளத்தில் கிடைத்த தகவல்களின்படி, கடைசியாக 2019 நவம்பரில் அவர் பிரேசில் பயணம் செய்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com