பிரிட்டன் வாழ் இந்தியர்களுடன் மோடி உரையாடலின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
சுவீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் அரசு முறைப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருக்கிறார். முதல் கட்டமாக ஸ்வீடன் சென்ற அவர், நார்டிக் நாடுகளின் பிரதமர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அங்கிருந்து நேற்று லண்டன் சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை சந்தித்த மோடி, இந்தியா - பிரிட்டன் நாடுகளிடையேயான இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பக்கிங்காம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத்தை மோடி சந்தித்து பேசினார். பிரிட்டன் வாழ் இந்தியர்களுடன் உரையாடினார். அப்போது அரங்கத்தில் இருந்த இளைஞர் ஒருவர் எழுந்து “ ஒவ்வொரு நாளும் 20 மணி நேரம் இடைவிடாமல் உழைக்கிறீர்கள் அந்த ரகசியத்தை சொல்லிக் கொடுங்கள்” என்றார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, நான் கடந்த 20 வருடங்களாக தினமும் 1-2 கிலோ ‘திட்டு’களை தின்று கொண்டிருக்கிறேன் என்றார். இந்த பதிலை அவர் சொன்னவுடன் அரங்கமே அதிர்ந்தது. மோடியும் சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தார்.