காந்திக்கு பதில் மோடியா? மத்திய அமைச்சர் விளக்கம்
காதி கிராம தொழில் நிறுவனத்தின் காலண்டர்களில் காந்தி படத்துக்கு பதில் மோடி படம் இடம் பெற்றது குறித்த சர்ச்சைக்கு மத்திய அமைச்சர் கல்ராஜ் விளக்கமளித்துள்ளார்.
மத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் கமிஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காலண்டர்கள் மற்றும் டைரிகள் வெளியிடப்பட்டு வருகின்றன. வழக்கமாக காதி கிராமத் தொழில் கமிஷன் காலண்டர்களில் மகாத்மா காந்தி ராட்டையில் நூல் நூற்பது போன்ற படம் இடம் பெறும். ஆனால் இந்த ஆண்டு மகாத்மா காந்திக்கு பதில் மோடி ராட்டையில் நூல் நூற்பது போன்ற படம் அச்சிடப்பட்டுள்ளது என சர்ச்சை எழுந்துள்ளது.
இது குறித்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் கூறுகையில், காந்திக்கு பதில் மோடி இல்லை. காலண்டரில் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு படம் இடம் பெற்றுள்ளது என்றும் அதில் ஒரே ஒரு மாதத்திற்கு மட்டும் மோடியின் படம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காதி கிராமத் தொழில் கமிஷன் தலைவர் வினய்குமார் கூறுகையில், காதி காலண்டர்களில் காந்தி படம் இடம் பெறாதது இது முதல் தடவை அல்ல என்று விளக்கமளித்துள்ளார்.
2013- ஆம் ஆண்டில் இருந்தே மகாத்மா காந்தியின் படம் காலண்டரில் இடம் பெறவில்லை என்று கூறியுள்ள அவர், காந்தியை அவமதிக்கும் நோக்கில் இதனை செய்யவில்லை என்றும் வெளிநாட்டினர் மத்தியில் காதியைப் பிரபலப்படுத்துவதற்காகவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.