"கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் மோடிக்கும்..." - திரிணாமூல் எம்எல்ஏ ஆவேசம்

"கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் மோடிக்கும்..." - திரிணாமூல் எம்எல்ஏ ஆவேசம்
"கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் மோடிக்கும்..." - திரிணாமூல் எம்எல்ஏ ஆவேசம்

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலைமை தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஏற்படும் என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ இட்ரிஸ் அலி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் வெடித்துள்ள மக்கள் புரட்சியால் இலங்கை அதிபர் தப்பியோடிய சூழலில், இட்ரிஸ் அலி இவ்வாறு கூறியிருக்கிறார். கொல்கத்தாவில் உள்ள சியால்டா பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த ரயில் நிலையத்தை திறந்து வைக்கிறார். இதனிடையே, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதனால் திரிணாமூல் காங்கிரஸார் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அக்கட்சியின் எம்எல்ஏ இட்ரிஸ் அலி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சராக இருந்த சமயத்தில்தான், சியால்டா மெட்ரோ ரயில் நிலைய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்படியிருக்கும்போது, அந்த ரயில் நிலைய திறப்பு விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்படாதது அநீதி ஆகும். பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த இறுமாப்புடன் நடந்து கொள்கிறார். இப்படியே சென்றால், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட கதிதான், மோடிக்கும் ஏற்படும்" என்றார்.

முன்னதாக, மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து பாஜக தலைவர்களிடம் கேட்டபோது, "மேற்கு வங்க அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள் எப்போதும் அழைக்கப்பட்டதில்லை. இந்த கலாச்சாரத்தை தொடங்கி வைத்ததே திரிணாமூல் காங்கிரஸ்தான்" எனக் கூறினர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அதிபர் மாளிகையை நேற்று சூறையாடினர். இதனால் உயிருக்கு பயந்து தனது குடும்பத்தினருடன் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தப்பியோடி தலைமறைவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com